

கூடலூர்: கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழா வழிபாட்டில் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணாத்திப்பாறையில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஏப்ரல் 16-ம் தேதி சித்திரை முழுநிலவு விழா நடைபெற உள்ளது. இதற்காக தமிழக, கேரள அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் நடந்தது.
கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். தேனி, இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பிரவிண் உமேஷ் டோங்ரே, கருப்புசாமி, பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குநர் சுனில்பாபு, உத்தமபாளையம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா, கோட்டாட்சியர் கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணகி அறக்கட்டளையினர், விழாவை இரண்டு நாட்கள் நடத்தவும், வழிபாட்டு நேரத்தை அதிகரிக்கவும் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலில் இருக்க அனுமதிக்கப்படுவர். இதனால் பிற்பகல் 2 மணிக்கு மேல் கீழிருந்து கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லை. நடந்து செல்லும் பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.
புகையிலை, நெகிழி, மது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருமாநில போலீஸார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த முறை பக்தர்கள் கீழேயிருந்து கோயிலுக்குச் செல்ல பிற்பகல் 3 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இம்முறை அது 2 மணியாக குறைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 2 ஆண்டுகளாக நடமாட்டம் இல்லாத பகுதியாக மாறிவிட்டது. இதனால் வனவிலங்குகள் மூலம் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்றனர்.