

பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் தாஜ் நிஷா. இவருக்கு அரசு ஆய்வக உதவியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் வாங்கி ஏமாற்றியதாகவும், பணத்தை திரும்பக் கேட்டபோது தர மறுத்து ஜாதியைச் சொல்லி திட்டியதுடன் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் தமிழக சுற்று லாத் துறை அமைச்சர் சண்முக நாதனின் உதவியாளர் கிருஷ்ண முர்த்தி மீது தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் தாஜ் நிஷா வின் கணவர் புகார் அளித்தார்.
இதன்பேரில் கிருஷ்ணமூர்த்தி மீது கொலை மிரட்டல், வன் கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மார்ச் 16-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தூத் துக்குடி 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மார்ச் 30-ல் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் உள் நோக்கத்துடன் இந்த வழக்கில் போலீஸார் என்னை சேர்த்துள் ளனர். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் கூறியுள் ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.