

தென்காசி: பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் சாலடியூர், மருதடியூர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 குழந்தைகளை ஒரே ஆட்டோவில் ஏற்றி, வீட்டுக்கு அனுப்பி வைத்துள் ளனர். இதுதொடர்பான காட்சி சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜிடம் கேட்டபோது, “அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோவும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. அந்த ஆட்டோ ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பள்ளி பகுதிகளில் தினமும் காலை, மாலை நேரத்தில் ஆய்வு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக வாகனங்களில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் கூறும்போது, “அளவுக்கு அதிகமாக ஆட்டோவில் குழந்தைகளை அழைத்துச் சென்றதுடன், அந்த காட்சியை வீடியோ பதிவு செய்தவரிடம் ஆசிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.