

காரைக்கால்: புதுச்சேரி முதல்வர் ரங்க்சாமியை பாஜக நிம்மதியாக ஆட்சி செய்ய விடவில்லை என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காரைக்காலில் இன்று (மார்ச் 30) செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய துணை நிலை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகமும் முட்டுக்கட்டை போட்டக் காரணத்தால் எங்களால் சட்டப்பேரவையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை.
ஆனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜக-என்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான நிதி அளிக்கப்படும், பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தனர். காங்கிரஸ் ஆட்சியின்போது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் கூடுதலாக மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றோம். ஆனால் ரங்கசாமி முதல்வராக வந்த பிறகு கூடுதலாக 1.6 சதவீதம் தொகை மட்டுமே மத்திய அரசிடமிருந்து வாங்கியுள்ளார். முழு பட்ஜெட் போடுவதாக சொன்னவர்கள் தற்போது இடைக்கால பட்ஜெட் மட்டுமே போட்டுள்ளனர். எங்களை விமர்சித்த ரங்கசாமி இப்போது என்ன சொல்லப் போகிறார்? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. ஆட்சி மாற்றத்தால் புதுச்சேரிக்கு எவ்வித பயனும், பலனும் இல்லை.
பாஜகவுக்கும், என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளது, ரங்கசாமியை நிம்மதியாக ஆட்சி செய்ய விடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இன்றைய முக்கியமான சட்டப்பேரவை கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த உள்துறை அமைச்சர், 2 பாஜக எம்எல்ஏக்கள், பாஜக ஆதரவு சுயேட்சை உறுப்பினர் ஆகியோர் பங்கேற்கவில்லை. முதலீடு பெற்று வருவதற்காக துபாய் சென்றுள்ளதாகக் கூறி 7 நாட்களாக அங்கேயே தங்கியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று கூறியுள்ள நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தை, ரங்கசாமி அரசை பாஜக புறக்கணித்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு ரங்கசாமி தெளிவான விளக்கமளிக்க வேண்டும்.
காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டப பிரச்சினையை துரதிஷ்டவசமாக பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியலாக்க முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆட்சியாளர்கள் செய்த தவறின் காரணமாக, முகப்பு மண்டபத்தை இடிக்குமாறு நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. இம்மண்டபத்தால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை. மாநில அரசு மேல்முறையீடு செய்து தீர்ப்பை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதச்சார்பின்பையை குலைக்கின்ற வகையில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் நடந்துகொள்ளக் கூடாது.
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் உள்ள மணலை விற்பனை செய்வது தொடர்பாக வெளிப்படையான நவடிக்ககள் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் உள்ளிட்டோரை தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. விதிமுறைகளை மீறி செயல்படவேண்டும் என ஆட்சியாளர்கள் அதிகாரிகளை நிர்பந்திக்கும் போக்கு உள்ளது.
காரைக்காலில் அண்மைக் காலமாக பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், காவல் துறை தனிக் கவனம் செலுத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காரைக்காலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசின் நிர்வாக சீர்கேடுகளே இதற்கு காரணம். ரங்கசாமி முதல்வராக வரும் போதெல்லாம் குற்ற சம்பவங்கள் அதிகரித்து, ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. முதல்வர் ரவுடிகள் சவகாசத்தை கைவிட வேண்டும். முதல்வர் இதுவரை காரைக்கால் வரவில்லை. காரைக்காலுக்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2024 மக்களவைத் தேர்தலை மதச்சார்பற்ற சக்திகள் எல்லோரும் ஒருங்கிணைந்து சந்தித்தால் பாஜகவை தோற்கடிக்க முடியும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வாராக்கடன்கள் வசூலிக்கப்படவேயில்லை என்ற மத்திய நிதி அமைச்சர் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கடந்த 40 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வாராக் கடன் என்பது ரூ.8 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 7 ஆண்டுகால பாஜக ஆட்சிக் காலத்தில் வாராக்கடன் ரூ.20 லட்சம் கோடியாக உள்ளது என்பதை முதலில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
பேட்டியின் போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.