Published : 30 Mar 2022 10:05 AM
Last Updated : 30 Mar 2022 10:05 AM

அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் பரிசா; தண்டனையா? - அதிமுக கேள்வி

சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பன் நீக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பதுதான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா? என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறைஅமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கும், அத்துறையில் இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலாகா மாற்றம் பின்னணி: போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த திடீர் இலாகா மாற்றத்துக்கான காரணம் என்ன என்பதுகுறித்து தகவல்கள் வெளியாகிஉள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் நேற்று முன்தினம்மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:என்னையும், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்புக்கண்ணனையும் சிவகங்கையில் உள்ள அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் வீட்டுக்கு அழைத்திருந்தனர். அதன்படி அமைச்சரின் வீட்டுக்குச் சென்றோம்.

அங்கு அமைச்சரைப் பார்த்ததும் வணக்கம் தெரிவித்தேன், பதிலுக்கு அமைச்சர் வணக்கம் தெரிவிக்கவில்லை. “ஏயா நீ ஒரு (எனது சாதியை குறிப்பிட்டு) பிடிஓ, நீஒன்றியத் தலைவர் சொல்வதை மட்டுமே கேட்பாயா? நீ ஒரு (குறிப்பிட்ட சாதி) பிடிஓ என்பதால்உன்னை இங்கு வைத்திருக்கிறேன்” என என்னை அந்த சாதிபிடிஓ என பலமுறை உச்சரித்தார்.மேலும், “முதன்மைச் செயலாளரிடம் சொல்லி மாற்றிவிடுவேன்” என்று கூறினார். பின்னர் உதவியாளரிடம் கூறி இவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்றார். மேலும் வெளியே போங்கய்யா என என்னையும், அன்புக்கண்ணனையும் கேவலமாக பேசி அனுப்பினார். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது என கூறினார்.
இதையடுத்து அமைச்சர் ராஜ கண்ணப்பனை கண்டித்தும் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

அதேநேரத்தில் முதுகுளத்தூர் திமுக ஒன்றியச் செயலாளர்கள் பூபதி மணி, சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாகஜோதி ராமர், ராஜலெட்சுமி பூபதிமணிஆகியோர் ஆணையரை அமைச்சர்சாதியைச் சொல்லி அவமானப்படுத்திப் பேசவில்லை, ஆணையர்தான் முறைகேடுகளில் ஈடுபட்டுஉள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் சங்கர் லால் குமாவத்திடம் மனு அளித்தனர்.
இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் சாதிய அமைப்புகள் மற்றும் பாஜக சார்பில், சாதி பெயரைச் சொல்லிஅவமானப்படுத்திய ராஜகண்ணப்பனை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்தபோக்குவரத்துத் துறை திடீரென மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றம் முதுகுளத்தூர் சம்பவத்தின் எதிரொலியே என கூறப்படுகிறது.

அதிமுக கேள்வி: இந்நிலையில் அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பது தான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா? இது தண்டனையா அல்லது பரிசா? ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூட துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள்?" என்று வினவியுள்ளது.

— AIADMK (@AIADMKOfficial) March 29, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x