Published : 30 Mar 2022 07:10 AM
Last Updated : 30 Mar 2022 07:10 AM

2 நாள் பாரத் பந்த் நிறைவு: தமிழகத்தில் ரூ.1.60 லட்சம் கோடி காசோலை பரிவர்த்தனை பாதிப்பு

மத்திய அரசை கண்டித்து 2-வது நாளான நேற்று சென்னை குறளகம் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.படம்: ம.பிரபு

சென்னை: மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் நடத்திய 2 நாள் பொது வேலைநிறுத்தம் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் 90 சதவீத அரசுபேருந்துகள் இயக்கப்பட்டன.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் கடந்த 2 நாட்கள் பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.

2-ம் நாளான நேற்று தமிழகம் முழுவதும் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொது நிறுவன ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை 5 மணிக்கு பிறகு அனைத்து பேருந்துகளும் இயக் கப்பட்டன.

வங்கி சேவை பாதிப்பு

தமிழகத்தில் 40 ஆயிரம் ஊழியர்கள் உட்பட நாடு முழுவதும் 4 லட்சம் வங்கி ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. வங்கி ஆன்லைன் சேவைகள் பாதிப்பின்றி வழக்கம்போல செயல்பட்டன. ஏடிஎம் மையங்களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்கப்பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

கடந்த 2 நாளில் ரூ.3.20 லட்சம் கோடி மதிப்பிலான 2 கோடி காசோலை பரிவர்த்தனைகள் நாடு முழுதும் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் ரூ.1.60 லட்சம் கோடிமதிப்பிலான 50 ஆயிரம் காசோலைகள் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில், பாரதஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கவில்லை. எல்ஐசி அலுவலகத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன.

அதேநேரம், இதர மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x