Published : 30 Mar 2022 09:03 AM
Last Updated : 30 Mar 2022 09:03 AM

ஆடிட்டருடன் சென்று துபாயில் முதலீட்டாளரை முதல்வரின் குடும்ப உறுப்பினர் சந்தித்தது ஏன்? - அண்ணாமலை கேள்வி

சென்னை: முதல்வரின் குடும்ப உறுப்பினர், ஆடிட்டருடன் சென்று துபாயில் முதலீட்டாளரை முன்கூட்டியே சந்தித்தது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றதால் ரூ.6,100 கோடி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். அதில் ரூ.4,600 கோடியை, கேரளாவை சேர்ந்த, துபாயில் இருக்கக்கூடிய யூசுப் அலி உள்ளிட்ட 2 முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் யூசுப் அலி மட்டுமே 70 சதவீத பணத்தை முதலீடு செய்துள்ளார். அந்த யூசுப் அலியை முதல்வரின் குடும்ப உறவினர் கடந்த பிப்.2-ம் தேதி ஆடிட்டருடன் சென்று சந்தித்தது ஏன்? முன்னதாக, உதயநிதி ஸ்டாலின், சபரீசன், திமுக குடும்ப ஆடிட்டர் சண்முகராஜ் உட்பட 9 பேர்கடந்த பிப்.2-ம் தேதி சென்னையில் இருந்து துபாய்க்கு தனியார் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ரூ.100 கோடிநஷ்டஈடு கேட்டு எனக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அனைத்து விஷயங்களையும் ஆதாரத்துடன்தான் பேசியுள்ளேன். நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களை நான் மிரட்டி பணம் வாங்கியுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இன்று மாலை 6.15 மணி வரை கமலாலயத்தில் இருப்பேன். ஆதாரம் இருந்தால் என்னை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், திமுக பேசுவது அனைத்தும் பொய் என்றுதான் மக்கள் எடுத்துக்கொள்வார்கள்.

முதல்வர் உள்ளிட்டோர் விமானத்தில் சென்றது குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பிய பிறகு, அதற்கான பணத்தை திமுக கட்டிவிடும் என்றுகூறுகின்றனர். இதை முன்பே கூறியிருக்கலாம். ஓர் அரசு எப்போதும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.

தங்கள் சொந்தக் கட்சி சின்னத்தில்கூட நிற்க முடியாதவர்கள் முதல்வருக்கு ஆதரவாக பேசுகின்றனர்.

பொங்கல் தொகுப்பு வழங்கியது முதல் எந்த திட்டம், எந்த துறையை எடுத்தாலும் ஊழல்.

ரூ.4,472 கோடி மதிப்பிலான எண்ணூர் அனல்மின் நிலைய திட்டம் மூலம் தமிழகத்துக்கு நஷ்டம்தான் ஏற்படும். இதைவிட சூரிய ஒளி மின்சாரம் குறைவான விலையில் கிடைக்கும் என்று மின்வாரிய ஆலோசனை கூட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு இந்தியாவில் வங்கிகள் உத்தரவாதம் அளிக்க முன்வராததால், மேற்கிந்திய தீவுகளில் உள்ள தனியார் வங்கியில் இருந்து உத்தரவாதம் அளிப்பதாக கூறியுள்ளது. அதை மின்வாரியம் நிராகரித்துள்ளது. இவ்வாறு இருக்க, அந்த தனியார் நிறுவனத்துக்கு அந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் பதில் கூற வேண்டும்.

முதல்வர் ஆவதற்கு எனக்கு தகுதியோ, விருப்பமோ கிடையாது. முதல்வரை உருவாக்கவே நான் வந்துள்ளேன். தமிழக பாஜகவில் இருந்து முதல்வரை உருவாக்கிவிட்டு, என் தோட்டத்தில் ஆடு,மாடுகளுடன் காலத்தை கழிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உணவு பொருட்கள் விலை உயராமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க குறுகிய கால, நீண்ட கால திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அவதூறு நோட்டீஸா?

இதற்கிடையில், பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சமீபத்தில் துபாய்பயணம் மேற்கொண்டு திரும்பியிருக்கிறார். அவர், தமிழக முதல்வராக இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்றால் எதற்காக அவரது கட்சியின் அமைப்புச் செயலாளர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்?

தமிழக முதல்வருக்காக அட்டர்னி ஜெனரல் அல்லது அவரது அலுவலகம்தானே பேசியிருக்க வேண்டும். மூத்த வழக்கறிஞராக இருக்கும் வில்சன் சட்டம் தெரிந்தவர்தானே, அவர் எப்படி இதை அனுமதிக்கிறார். அடிப்படை சட்ட அறிவு இல்லாமல், அரசுக்காக கேள்வி கேட்கும் அதிகாரத்தில் இல்லாமல், முதல்வருக்காக கேள்விகேட்டு, அறியாமையை ஆர்.எஸ்.பாரதி வெளிப்படுத்தியிருக்கிறார்.

மக்கள் சக்தியுடன் போராடுபவரை அவதூறு நோட்டீஸ்களால் அசைக்க முடியாது. இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x