குடிமங்கலம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் முறைகேடு புகாரில் ஊழியர் சஸ்பெண்ட்: விசாரணை அதிகாரி நியமனம்

குடிமங்கலம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் முறைகேடு புகாரில் ஊழியர் சஸ்பெண்ட்: விசாரணை அதிகாரி நியமனம்
Updated on
1 min read

உடுமலை: குடிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின்பேரில், கூட்டுறவு ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

உடுமலையை அடுத்த குடிமங்கலத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு நகைக் கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ‘‘இதே சங்கத்தில் உறுப்பினராக உள்ள பழநி என்பவருக்கு 2020-ல் ரூ.30,000 நகைக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் ரசீதில் நகை அளவு குறிப்பிடப்படவில்லை. இது முதல் தவறு. தமிழக அரசின் அறிவிப்பின்படி, 25.3.2022-ல் வழங்கப்பட்டசான்றிதழில், கடன் தொகை ரூ.39,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ரூ.9000 மோசடி செய்யப்பட்டுள்ளது. இதே தொகைக்கு வட்டி, அசல் சேர்த்து ரூ.42,848 தள்ளுபடி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல நூற்றுக்கணக்கான விவசாயிகளிடம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதையடுத்து, சங்க செயலாளர் எஸ்.ஜெயபாரதி, எழுத்தாளர் கே.சின்னசாமியை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

புகார் குறித்து, 31.3.2021-ல் நிலுவையில் இருந்த நகைக் கடன்கள், நாளது தேதி வரை உள்ள நகைக் கடன்களின் உண்மை தன்மையை கண்டறிய, பிரிவு 81-ன் கீழ் விசாரணை மேற்கொள்ள கூட்டுறவு துணைப் பதிவாளர் ப.மணி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விசாரணை அலுவலராக மடத்துக்குளம் கூட்டுறவு சார் பதிவாளர் மாரிமுத்து என்பவரை நியமித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in