Last Updated : 30 Mar, 2022 09:32 AM

 

Published : 30 Mar 2022 09:32 AM
Last Updated : 30 Mar 2022 09:32 AM

கோடையிலும் பாலாற்றில் தொடரும் நீரோட்டம்: நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததே காரணம் என அதிகாரிகள் தகவல்

கோடையிலும் காஞ்சிபுரம் பாலாற்றில் நீரோட்டம் காணப்படுகிறது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலாற்றில் கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு கோடைக்காலத்திலும் நீரோட்டம் தொடர்ந்து வருவதால், கரையோர கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் நீரோட்டம் தொடர்ந்து வருவதாக, பாலாறு கீழ் வடிநிலக் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக எல்லையோர ஆந்திர மாநில பகுதிகள் மற்றும் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில், கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி, வரலாறு காணாத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன்மூலம், பாலாற்றிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய்கள் மூலம் கரையோர கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பின.

எனினும், பாலாற்றில் 1.50 லட்சம் கன அடி அளவில் வெள்ளம் சென்றதால், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றுப்படுகை முழுவதிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துச் சென்றது. மேலும், வாயலூர், வல்லிபுரம், பழையசீவரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நின்று ரம்மியமாகக் காட்சியளிக்கிறது.

இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கும் கிணறுகளில் நீர்ச்சுரப்பு அதிகரித்துள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கி கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், பாலாற்றில் நீரோட்டம் தொடர்ந்து வருவதால் காஞ்சிபுரம் மற்றும் கரையோர கிராம மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாலாற்றில் தொடரும் நீரோட்டத்துக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வே காரணம் எனப் பாலாறு கீழ் வடிநிலக் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மற்றும் கரையோர கிராம மக்கள் கூறும்போது, “சரியான மழையின்றி பாலைவனம் போல் காட்சியளித்து வந்த பாலாற்றில், வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளம் கரையோர கிராம மக்களை அச்சுறுத்தியது. ஆனால், பல ஆண்டுகளாகத் தண்ணீரைக் காணாத கால்வாய்கள் வெள்ளநீரை முழுவதும் உறிஞ்சிய பின்னரே ஏரிகளுக்குக் கொண்டு சேர்த்ததால், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது, மழைக்காலம் நிறைவடைந்து கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையிலும் பாலாற்றில் நீரோட்டம் நீடித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றனர்.

பாலாறு கீழ் வடிநிலக் கோட்ட அதிகாரிகள் சிலர் கூறும்போது, “மழைக்காலத்திலும் நீரின்றி காட்சியளித்து வந்த பாலாறு, கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாகப் பெரு வெள்ளத்தைச் சந்தித்தது. இதன்மூலம், கரையோர கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் ஆற்றுப்படுகையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால், கோடைக்காலத்திலும் ஆற்றுப்படுகையில் தண்ணீர் உறிஞ்சப்படாமல் வழிந்தோடுகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x