Published : 30 Mar 2022 09:37 AM
Last Updated : 30 Mar 2022 09:37 AM

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சந்திப்பு: மக்களைத் தேடி மருத்துவம், ஓய்வூதிய திட்ட ஒதுக்கீடுகளுக்கு பாராட்டு

சென்னை: முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ்தர் டப்லோ, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததுடன், மக்களை தேடி மருத்துவம், ஒய்வூதிய திட்ட நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், நேற்று முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ்தர் டப்லோ சந்தித்து பேசினார்.

அப்போது, கொள்கைமுடிவுகள், அரசு முதலீடுகளுக்கு தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான அணுகுமுறையை பயன்படுத்துவது ஆகியவற்றில் தமிழக அரசின் நிலையான உறுதிப்பாட்டை எஸ்தர் டப்லோ பாராட்டினார். மேலும், மாநிலத்தில் உள்ள நலிந்த பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தை சீர்திருத்தும் பரிந்துரையை ஏற்று முதியோர் ஓய்வூதியதிட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு,மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியதை பாராட்டினார்.

மக்கள் தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு குறிப்பாக தனியாக வாழும் முதியோருக்கு வலுவான பாதுகாப்பு வலையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மக்களின் வீடுகளுக்கே சென்றுஅத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் மக்களைத் தேடிமருத்துவம் திட்டம், அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கைத் தரம் என்ற அரசின் குறிக்கோளுக்கு ஒரு முன்னோடி முயற்சி என்றுடப்லோ பாராட்டினார். தமிழகத்தில் ஏழைகள் மற்றும் முதியவர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களை வெளிக் கொணர அடுத்த 8 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்படும் என்றும், இப்பிரச்சினைகளுக்கான கொள்கை தீர்வுகளை உருவாக்க இது பயன்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தரவுகள் அடிப்படையில் கொள்கைகளை வகுக்கும் முயற்சிகளுக்கும் மாநிலத்தின் சமூக பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும் தமிழக அரசு எப்போதும் தனது முழு ஆதரவை அளிக்கும் என்று முதல்வரும் டப்லோவிடம் உறுதியளித்தார்.

சந்திப்பின்போது, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், ஜெ-பால் தொண்டு நிறுவன குளோபல் செயல் இயக்குநர் இக்பால் தாலிவால், தெற்காசிய தொண்டு நிறுவன செயல் இயக்குநர் ஷோபினி முகர்ஜி. இயக்குநர் குணால் சர்மா ஆகியோர் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x