Published : 30 Mar 2022 09:47 AM
Last Updated : 30 Mar 2022 09:47 AM

ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள ‘சென்ட்ரல் ஸ்கொயர்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்

சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே மத்திய சதுக்கம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அங்கு மக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சதுக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்துவைக்கிறார்.படம்: ம.பிரபு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.400 கோடி செலவில் ‘சென்ட்ரல் ஸ்கொயர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சென்னை சென்ட்ரல், மெட்ரோ ரயில் நிலையம், ரிப்பன் பில்டிங், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, பூங்கா நகர் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைத்து ஒரே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் அடையாளமாக இதை மாற்றும் அளவிற்கு இதில், அழகிய செடிகள், நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. 500 கார்கள், 1,500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுரங்கப்பாதை வழியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும், சாலையை கடக்கவும் பொதுமக்கள் சிரமமின்றி செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் கீழ் சென்ட்ரல் பிளாசா என்றபெயரில் 31 மாடிகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில், பயணியர் விடுதிகள், ஷாப்பிங் மால், பொழுதுபோக்கு பூங்கா, ஓட்டல்கள் மற்றும் தரைக்கு அடியில் மூன்றடுக்கு வாகன நிறுத்தம் என சகல வசதிகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் புதிய நடைபாதைகள், கான்கிரீட் பெஞ்சுகள்,மேசைகளுடன் கூடிய இருக்கைகள், இரண்டு பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1,000 பேர் அமரலாம்..

ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் கான்கிரீட் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன. சென்டிரல் ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்காக வெளியிடங்களில் இருந்து வரும் பயணிகள் தங்கள் கொண்டு வந்த பொருட்களுடன், இந்த இடங்களில் சற்று அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் ரயில் அல்லது பேருந்து பயணத்தை தொடரலாம். மேலும், பயணிகள் எளிதாக செல்வதற்காக லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதிகளும் இங்குள்ளன.

‘சென்ட்ரல் ஸ்கொயர்’ வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x