Published : 20 Apr 2016 02:54 PM
Last Updated : 20 Apr 2016 02:54 PM

தம்பித்துரைக்கு அதிமுகவில் மீண்டும் செல்வாக்கு: ஜெ. பிரச்சார ஏற்பாடுகளை கவனிப்பதில் தீவிரம்

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார ஏற்பாடுகளை மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை கவனித்து வருகிறார். இதன் மூலம் அவர் கட்சியில் மீண்டும் செல்வாக்கு பெற ஆரம்பித்துள்ளார்.

அதிமுகவில் கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரை அக்கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதா பிரச்சார பயணத்தை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலான குழு ஏற்பாடு செய்துவந்தது. இதனால் அக்கட்சியில் செங்கோட்டையன் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கட்சித் தலைமை நிலையச் செயலாளர், அமைச்சர் என செல்வாக்குடன் வலம் வந்தார்.

இடையில் குடும்ப சர்ச்சையில் சிக்கி அமைச்சர், கட்சிப் பதவிகள் இழந்து கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதனால், கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் பிரச்சாரப் பயண ஏற்பாடுகளை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐவர் அணி கவனித்தது. மக்களவைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றாலும் சமீப காலமாக ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் உள்ளனர்.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் செங்கோட்டையனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் ஜெயலலிதா பிரச்சார ஏற்பாடுகளை வழக்கம்போல் இவர் கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு சசிகலாவுக்கு நெருக்கமான எம்ஜிஆர் காலத்திலேயே மக்களவை துணைத் தலைவராக இருந்தவருமான கொள்கைபரப்பு செயலர் மு.தம்பித்துரைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வருவதற்கு முன், அந்த மாவட்டத்துக்குச் சென்று மேடை அமைப்பு அலங்காரத்தை கவனிக்கிறார். ஜெயலலிதா வரும் வரை அவர் பேசும் மேடை, தம்பித்துரை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவரது மேற்பார்வையில்தான், முதல்வர் பாதுகாப்புப் பிரிவு போலீஸார், உள்ளூர் நிர்வாகிகள் ஜெயலலிதாவின் ஒட்டுமொத்த பிரச்சார ஏற்பாடுகளையும் கவனிக்கின்றனர்.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளியில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தம்பித்துரை. இவரது கல்வி அறிவு, ஆங்கில புலமையைப் பார்த்த எம்ஜிஆர், இவரை மக்களவை துணை சபாநாயகர் ஆக்கினார். இதனால், எம்ஜிஆர் காலத்தில் ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்ந்தார். அதிமுக இரண்டாக பிரிந்தபோது, சில காலம் தம்பித்துரை தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட அதிமுகவில் கே.பி.முனுசாமி வளர்ச்சியடைந்தார். இவரது வளர்ச்சியால் அதிமுகவில் தம்பித்துரை முக்கியத்துவம் பெற முடியாமல் தவித்தார்.

மீண்டும் கட்சித் தலைமையிடம் நெருக்கமாகி 2001-ம் ஆண்டு மாநில கல்வித் துறை அமைச்சரானார். அப்போது ஒரு சர்ச்சையில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்தார். இதையடுத்து கரூர் தொகுதியில் 2009, 2014 தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ந்து 2 முறை எம்பி ஆகி டெல்லியில் கட்சித் தொடர்புகளை பலப்படுத்தவும், கர்நாடகாவில் நடக்கும் ஜெயலலிதா வழக்கு களில் ஆலோசனைகளை சொல்வதுமாக கட்சி தலைமையிடம் நெருக்கமானார்.

இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மகள் திருமணத்துக்கு செல்வதற்கு ஜெயலலிதா அனுமதி வழங்காததால் தம்பித்துரை அந்த திருமணத்துக்கே செல்லவில்லை. தம்பித்துரையின் விசுவாசத்தைப் பார்த்த ஜெயலலிதா அவருக்கு கொள்கைபரப்புச் செயலர், துணை சபாநாயகர் பதவிகளை வழங்கினார் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x