Published : 30 Mar 2022 06:30 AM
Last Updated : 30 Mar 2022 06:30 AM
தஞ்சாவூர்: தமிழகத்தில் ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டும் சம்பவங்களைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளி வாகன விபத்து
தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2012-ம் ஆண்டுமுதல் தனியார் பள்ளியில் வாகனங்களை இயக்குவது குறித்து விதிமுறைகள் உள்ளன. அதில், குழந்தைகள் பள்ளியில் வாகனங்களில் ஏறும்போதும், இறங்கும்போதும் இரு ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இதில் தவறுகள் நடந்து, விபத்து நேரிட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் வேன் மோதி மாணவன் உயிரிழந்த பள்ளியில், இந்த விதிமுறைகளை முறையாக கடைபிடித்திருந்தால், இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
இதுகுறித்து, ஏப்.4-ம் தேதி நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் பேருந்துகளில் முறையாக சரியான நேரத்தில் ஏறிச் செல்கின்றனர். ஆனால் ஒருசில மாணவர்கள், பேருந்து நிற்கும்போது ஏறாமல், பேருந்துகளின் பின்னால் ஓடிச் சென்று ஏறுகிறார்கள். இதுகுறித்து தங்களது பிள்ளைகளுக்கு அறிவுறுத்துமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை, இதில் குறை சொல்லக் கூடாது எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT