Published : 30 Mar 2022 06:14 AM
Last Updated : 30 Mar 2022 06:14 AM
தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் சாலடியூர், மருதடியூர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் ஒரே ஆட்டோ வில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர். சாலடியூர் பகுதியில் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த தமிழன் மக்கள் நலச்சங்க ஒன்றியச் செயலாளர் முருகன் என்பவர், தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்த ஆட்டோவில் வந்த பள்ளி ஆசிரியர், வீடியோ எடுத்ததை கண்டித்து வாக்குவாதம் செய்துள்ளார்.
இதுகுறித்து முருகன் கூறும்போது, “ஆட்டோவில் உள்ள இருக்கை, அதற்கு முன்பு உள்ள காலியிடம், இருக்கைக்கு பின்னால் சரக்கு வைக்கும் பகுதி ஆகியவற்றில் சுமார் 30 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்றனர். புத்தகப் பைகளை ஆட்டோவுக்கு உள்ளேயும், வெளியேயும் தொங்க விட்டு செல்கின்றனர். உடன் 2 ஆசிரியர்களும் வந்தனர். குழந்தைகளின் பாதுகாப்பில் சிறிதும் அக்கறையின்றி செயல் படுகின்றனர். இது தொடர்கதையாக நடக்கிறது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் அனுப்பப்பட்டுள்ளது. உரிய நடவடி க்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்” என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மேலும் கூறும்போது, “பள்ளி, கல்லூரி வாகனங்களை போக்குவரத்துத் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை, கல்வித்துறை இணைந்து கூட்டாய்வு செய்கிறது. ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகளை மூட்டைகளை ஏற்றுவதுபோல் ஆட்டோவில் திணித்துக்கொண்டு செல்கின்றனர்.
ஆவுடையானூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. காலை, மாலை நேரங்களில் அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதை வாடிக்கையாகக் கொள்ளாமல் முன்னெச் சரிக்கையு டன் செயல்பட்டு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பெற்றோரும் இதுபோல் தங்கள் குழந்தைகளை ஆட்டோவில் திணித்துக்கொண்டு அழைத்துச் செல்வதை அனுமதிக்காமல், குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT