Published : 30 Mar 2022 06:56 AM
Last Updated : 30 Mar 2022 06:56 AM

வத்தலுக்கு விலை இருந்தும் போதிய விளைச்சல் இல்லை: விளாத்திகுளம், புதூர் பகுதி மிளகாய் விவசாயிகள் கவலை

விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரம் பகுதியில் செடிகளில் இருந்து குண்டு மிளகாய் பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய பெண் தொழிலாளர்கள். (அடுத்த படம்) வைப்பாற்று மணலில் காய வைக்கப்பட்டுள்ள குண்டு மிளகாய் பழங்கள். (கடைசி படம்) நன்றாக காய்ந்த குண்டு மிளகாய் வத்தலை விற்பனைக்கு கொண்டு செல்ல மூட்டை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

கோவில்பட்டி: வத்தலுக்கு விலை இருந்தும் போதியவிளைச்சல் இல்லாததால் விளாத்திகுளம், புதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 25,000 ஹெக்டேர் பரப்பளவில் ராபிபருவத்தில் வெங்காய பயிருடன் குண்டுமிளகாய் விதைகளை விவசாயிகள் விதைத்தனர். 6 மாத கால பயிரான இவை வளரும் நேரத்தில், அதாவது டிசம்பர் மாதத்தில் இருந்து மழை பெய்யவில்லை. இதனால், குண்டு மிளகாய் செடி வளர்ச்சி பாதிக்கப்பட்டது. தற்போது செடிகளில் இருந்து மிளகாய் பழங்களை பறித்து வைப்பாற்று மணலில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். முன்பு சராசரியாக ஏக்கருக்கு 6 குவிண்டால் வரை குண்டு மிளகாய் பழம் மகசூல் கிடைக்கும். ஆனால், பருவத்துக்கு மழை பெய்யாததால், இந்தாண்டு ஏக்கருக்கு ஒரு குவிண்டால் மிளகாய் பழம் கிடைப்பதே அரிதாகி விட்டது. ஆனால், ஒரு குவிண்டால் குண்டு வத்தலுக்கு ரூ.23 ஆயிரம் வரை சந்தையில் விலை கிடைக்கிறது. விலை இருந்தும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.

இதுகுறித்து விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரத்தை சேர்ந்த விவசாயி முனியசாமி கூறியதாவது: கடந்த முறை பெய்த மழையால் இப்பகுதியில் 10,000 ஹெக்டேரில் 3,000 ஹெக்டேர் பயிரிட்டிருந்த மிளகாய்ச் செடிகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் தேவையான நேரத்துக்கு மழையில்லாததால், மீதமிருந்த 7,000 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த மிளகாய்ச் செடிகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் வாடியது. இதை காப்பாற்ற பக்கத்தில் உள்ள ஊருணியில் இருந்து மோட்டார் மூலமாகவும், டேங்கர் லாரி மூலமாக வும் தண்ணீர் ஊற்றினோம். சிலர் செலவு அதிகரிக்கும் என்பதால், அப்படியே விட்டுவிட்டனர்.

ஆனால், மிளகாய் மகசூல் என்பது சொல்லும் அளவுக்கு இல்லை. ஒரு ஏக்கருக்கு 3 முதல் 6 குவிண்டால் வரை மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில் ஒரு குவிண்டால் கிடைப்பதே அரிதாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் மிளகாய் வத்தல் ரூ.23,000 முதல் ரூ.26,000 வரை விற்பனையானது.

ஆனால், இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு குவிண்டால் ரூ.40,000 முதல் ரூ.42,000 வரை சந்தையில் விலை இருந்தது. ஆனால், விலை இருந்தும் விளைச்சல் இல்லை.

மிளகாய் சாகுபடியை மட்டும் நம்பியேஏராளமான குடும்பங்கள் உள்ளன. கடந்த2 ஆண்டுகளாக ஏற்பட்ட கடனை இந்தாண்டு அடைத்துவிடலாம் என நினைத்துதான் பயிரிட்டோம். ஆனால், கடனில் இருந்து மீள வழியில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x