Published : 29 Mar 2022 09:10 PM
Last Updated : 29 Mar 2022 09:10 PM

'சாதியைக் குறிப்பிட்டு அவமதிப்பு' | அதிரடியாக இலாகா மாற்றப்பட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் - நடந்தது என்ன?

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ள ராஜகண்ணப்பன் | கோப்புப் படம்

சென்னை: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிரடி மாற்றம்: இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுகிறார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுகிறார். தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று, இந்த இலாகா மாற்றம் செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்புலம் என்ன? - முன்னதாக, "தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி என்னை அவமானப்படுத்தினார்" என்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கூறியிருந்தார். இந்த சர்ச்சையின் எதிரொலியாகவே, அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் துறை மாற்றப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் கூறியது: "நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சிவகங்கையில் உள்ள அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இல்லத்துக்கு, நானும் எனது நண்பருமான பிடிஓ அன்புக்கண்ணனும் சென்றோம். அமைச்சரின் இல்லத்துக்குச் சென்றவுடன், அமைச்சருக்கு நான் வணக்கம் தெரிவித்தேன். பதிலுக்கு அவர் வணக்கம் கூறவில்லை. என்னைப் பார்த்தவுடன் அமைச்சர், ஏன்யா நீ ஒரு ........ பிடிஓ, சேர்மேனுக்கு மட்டும்தான் நீ சப்போர்ட் பண்ணுவ, சேர்மேன் சொல்வதை மட்டும்தான் நீ கேட்ப, மற்றவர்கள் யார் சொன்னாலும் நீ கேட்க மாட்ட, யார் போன் செய்தாலும் எடுக்க மாட்ட, நீ ஒரு ......... சேர்ந்த பிடிஓ தானே?

இந்த பிளாக்ல, நீ ..... பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் உன்னை வைத்துள்ளேன். உன்னை உடனே டிரான்ஸ்பர் செய்து இந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு மாற்றிவிடுவேன். முதன்மைச் செயலாளர் அவரது பெயரையும் உச்சரித்து, பலமுறை என்னை ...... பிரிவைச் சேர்ந்த பிடிஓ என்பதைக் குறிப்பிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருமையில் பேசினார்.

உடனடியாக என் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனே என்னை டிரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, அமைச்சரின் உதவியாளர் கண்ணனிடம் கூறினார். மேலும், கடுமையாக என்னையும், அன்புக்கண்ணனையும் பேசி "வெளியே போங்கய்யா" என்று நாயை விட கேவலமாக அமைச்சர் நடத்தினார். இதுகுறித்து ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகி யோரைச் சந்தித்து புகார் அளிக்க உள்ளேன்" என்று அவர் கூறியிருந்தார்.

(குறிப்பு: இந்தச் செய்தியில் சாதியின் பெயருக்கு பதிலாக .............. என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.)

திமுகவினர் மறுப்பு: இந்தச் சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். ஆனால், மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தால், அவர் மனு அளிக்கவில்லை.

முதுகுளத்தூர் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் க.சண்முகம், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சி.பூபதிமணி, கிழக்கு ஒன்றிய கவுன்சிலர் ராஜலெட்சுமி பூபதிமணி, ஒன்றிய குழு உறுப்பினர் ராம.நாகஜோதி ராமர் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம், மாநில அரசுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிடும் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதுதொடர்பாக திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: கடந்த 26.3.2022 அன்று வேளாண்மை இடு பொருள் வழங்கும் நிகழ்ச்சி முடிந்த உடன் முதுகுளத்தூர் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஆனால் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமைச்சரை சந்திக்கவில்லை.

மறுநாள் 27.3.2022 காலையில் அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் குறித்து அமைச்சர் விசாரித்தார். இனிமேல் இது போன்று புகார்கள் வரும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதன்பிறகு 28.3.2022 அன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேட்டியளித்தார்.

எனவே, மாவட்ட ஆட்சியர், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், சாதி ரீதியிலான அமைச்சர் ராஜகண்ணப்பனின் அணுகுமுறையில் அதிருப்தி ஏற்பட்டதன் விளைவாக, அவரது இலாகா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் பேசப்படுகிறது.

முதல்முறை அமைச்சர்களின் இலாகா மாற்றம்: தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி, ஆட்சி அமைத்த பின், முதல் முறையாக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிடிவி தினகரன் கேள்வி:

அமைச்சரின் இலாகா மாற்றம் தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதல்வர் நினைக்கிறாரா? 'எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?

சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்?! ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

முன்னதாக, 'ஒரு பக்கம் சமூக நீதி காக்க முதல்வர் ஸ்டாலின் குழு அமைக்கிறார். சாதி மதம் கடந்தது எங்கள் திராவிட மாடல் என்று பெருமையாகப் பேசுகிறார். ஆனால் அவர் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் மீது சாதிய ரீதியான புகார் வந்துள்ளது வெட்கக்கேடானது. இது குறித்து உடனடியாக விசாரித்து, இது உண்மை எனும் பட்சத்தில் போக்குவரத்துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதுவே சமூகநீதியை காப்பதாய் முதல்வர் கூறும் செய்தியை உண்மையாக்கும்' மக்கள் நீதி மய்யம் கட்சி கருத்து தெரிவித்திருந்தும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x