Published : 29 Mar 2022 06:16 AM
Last Updated : 29 Mar 2022 06:16 AM

2 நாள் பாரத் பந்த் | போக்குவரத்து, வங்கி சேவை பாதிப்பு: மக்கள் கடும் அவதி; தொழிலாளர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்த 2 நாள் பொது வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. முதல்நாளில் தமிழகத்தில் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வங்கிச் சேவைகளும் பாதிக்கப் பட்டன.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், சிஐடியு, ஐஎன்டியுசி, எம்எம்எஸ், ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. இதனால், பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. பெரும்பாலான தொழிற்சங்கங்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் பாதிப்பு அதிகமாக இருந்தது.

‘ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது’ என மத்திய, மாநில அரசுகள் எச்சரித்தபோதும்கூட நேற்று பொது வேலைநிறுத்தம் தீவிரமாக நடந்தது. தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான ஓட்டுநர், நடத்துநர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.

அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்து இருந்தனர். ஆனால், நேற்று காலை அந்த சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இதனால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தனியார் பேருந்துகள் மட்டும் முழுமையாக ஓடியதால் அதில் கூட்டம் அதிகமாக இருந்தது.

3 மடங்கு கட்டணம்

சென்னையில் 80 சதவீத மாநகர பேருந்துகள் ஓடவில்லை. இதனால், பேருந்து நிறுத்தங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்து நின்றனர்.

வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆட்டோ, டாக்சிகளில் 3 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலித்தனர். பலர் சரக்கு வாகனங்களில் ஏறிச் சென்றனர். சிலர் நடந்தே சென்றனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்றுள்ளதால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டது. வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் தி.நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வங்கி ஆன்லைன் சேவைகள் பாதிப்பின்றி வழக்கம்போல செயல்பட்டன. ஏடிஎம் மையங்களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்கப்பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

வேலைநிறுத்தம் காரணமாக, நாள் ஒன்றுக்கு ரூ.1.60 லட்சம் கோடி மதிப்பிலான 1 கோடி காசோலைகள் என்ற அளவில் 2 நாளுக்கு ரூ.3.20 லட்சம் கோடி மதிப்பிலான 2 கோடி காசோலை பரிவர்த்தனைகள் நாடு முழுதும் பாதிக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் பங்கேற்க வில்லை.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை மைய அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் தமிழக பிரிவு பொதுச் செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி தலைமையில் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். இதேபோல, எல்ஐசி அலுவலகம் முன்பாக அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் சென்னை பகுதி-1 தலைவர் ஜெயராமன், பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், சங்கத்தின் தென்மண்டல பொதுச் செயலாளர் செந்தில்குமார், முகவர் சங்கத் தின் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணா சாலை, எழும்பூர், சென்ட்ரல் உட்பட சென்னையில் 21 இடங்களில் தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் உடனே கலைந்து போக செய்ததால் பெரிய அளவில் வாகன நெரிசல் ஏற்படவில்லை. இதேபோல தமிழகம் முழுவதும் சுமார் 165 இடங்களில் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

37 ஆயிரம் பேர் கைது

தமிழகத்தில் ரயில், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 37 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 323 இடங்களில் சாலை மறியல் போராட்டமும், 155 இடங்களில் ஆர்ப்பாட்டமும் 3 இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் 5 இடங்களில் அலுவலக முற்றுகை போராட்டமும் நடந்ததாக டிஜிபி அலுவலக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொமுச முடிவு

திமுக தொழிற்சங்கமான தொமுச பொருளாளர் நடராஜன் கூறும்போது, ‘‘பேருந்துகள் இயக் கப்படாததால் பொதுமக்கள் அதிக மாக பாதிக்கப்பட்டனர். போராட்டத்தின் வடிவை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப் படையில், இன்று (28-ம் தேதி) 60 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x