விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரங்கள் பெற உழவன் செயலியில் பதிவுசெய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரங்கள் பெற உழவன் செயலியில் பதிவுசெய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

பொள்ளாச்சி: விவசாயிகள் தென்னை, நெற் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க 50 சதவீத மானிய விலையில் உரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவற்றை பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்யவும் வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து வேளாண்துறை யினர் கூறியதாவது: ஆனைமலை வட்டாரத்தில் ‘கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி’ திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் இடுபொருட்கள் விநியோகிக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தென்னையில் உழவு மேற்கொள்ளவும் வட்டப் பாத்திகளில் தக்கைப்பூண்டு விதைத்து மடக்கி உழுவதற்கும் பின்னேற்பு மானியம் ரூ.2,500 வழங்கப்பட உள்ளது.

குரும்பைகள் உதிர்வதை தவிர்க்கவும், மகசூல் அதிகரிக்கவும் உயிர் உரங்கள் மற்றும் போராக்ஸ் நுண்ணூட்டச்சத்துகள் வேளாண்மைத் துறையின் மூலம் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படவுள்ளன. நெற் பயிர்களுக்கு ஜிப்சம் மற்றும் துத்தநாக சல்பேட் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன. இளம் நெற்பயிர்களில் தூர் வளர்ச்சிக்கும், வளர்ந்த பயிரில் விளைச்சலை அதிகரிக்கவும், துத்தநாகச் சத்து மிகவும் அத்தியா வசியமாகிறது.

நெல்வயல்களில் காற்றோட்டம் அதிகரிக்க இரண்டாம் நிலை ஊட்டச்சத்து கால்சியம் மற்றும் கந்தகம் சேர்ந்த ஜிப்சம் உரம் இட வேண்டும். எனவே, ஒரு விவசாயிக்கு ஓர் ஏக்கருக்கு தேவையான துத்தநாக சல்பேட் 10 கிலோ அல்லது ஜிப்சம் 200 கிலோ 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.

மேலும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் வரப்பு ஓரங்களில் மரங்களை வளர்க்க ஒரு விவசாயிக்கு 50 பனங்கொட்டைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

மேற்கண்ட மூன்று திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகள் ஹெக்டேருக்கு 20 எண்கள் அடங்கிய தொகுப்பு 90 சதவீத மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in