

திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிர்வாகிகள், காத்திருப்பு மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு பின் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையிலான விவசாயிகள், ஆட்சியர் சு.வினீத்திடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தில் நில உரிமை எடுக்கப்படுவதில்லை. நிலத்தின் அனுபவ உரிமை மட்டும் எடுக்கப்படுகிறது. ஆனால் நில உரிமைக்கு எடுக்கப்படும் திட்டங்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறையை பின்பற்றி இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் குறைவான இழப்பீடே விவசாயிகளுக்கு கிடைக்கும். கோவையில் பாதிக்கப்படும் வருவாய் கிராமத்தில் உள்ள அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை, அந்த வருவாய் கிராமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நிலங்களில் அடிப்படை மதிப்பாக கணக்கில் கொண்டு இழப்பீடு நிர்ணயம் செய்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் நில உரிமை எடுக்கப்படும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் அரசாணையின் படி, இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த தொகையே இழப்பீடாக கிடைக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றும் தொடர்புடைய நிறுவனங்களே விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு தர தயாராக உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி, பவர்கிரிட் நிறுவனங்களின் திட்டங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட மிகக் குறைவான இழப்பீடு முறையை, கோவை மாவட்ட ஆட்சியரின் வழிமுறைப்படி மறு நிர்ணயம் செய்து கூடுதல் இழப்பீட்டை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் பாலவாடிராசிபாளையம் முதல் பாலவாடி, ஈங்கூர் முதல் அரசூர், தப்புக்குண்டு- அணிக்கடவு மைவாடி இணைப்புத்திட்டம், பல்லடம்- குருக்கத்தி ராசிபாளையம் இணைப்புத் திட்டம் ஆகிய 4 திட்டங்களுக்கு கோவை மாவட்டத்தைபோல திருப்பூர் மாவட்டத்தில் நிலஅனுபவ உரிமை எடுப்பதற்கான இழப்பீடு நிர்ணய முறையை பின்பற்ற வேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை பணிகளை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து விவசாயிகளிடம் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கருமத்தம்பட்டி
கோவை மாவட்டம் அரசூர் முதல் ஈங்கூர் வரை, உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசூர் அருகே உயர் மின்கோபுரம் அமைக்கும் இடத்தில் திரண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர், சில விவசாயிகள் உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.