பிஞ்சு, பழங்கள் நிறைந்த செடிகளுடன் உழவு செய்யப்படும் தக்காளி வயல்கள்: விலை சரிவால் விவசாயிகள் வேதனை

தருமபுரி மாவட்டம் ராணிமூக்கனூர் அடுத்த அண்ணா நகர் பகுதியில் பிஞ்சும், பழமுமாக உள்ள தக்காளி செடிகளையும் சேர்த்து உழவு செய்யும் வயலில், திரண்ட பழங்களை அறுத்துச் செல்லும் அப்பகுதி பெண்கள்
தருமபுரி மாவட்டம் ராணிமூக்கனூர் அடுத்த அண்ணா நகர் பகுதியில் பிஞ்சும், பழமுமாக உள்ள தக்காளி செடிகளையும் சேர்த்து உழவு செய்யும் வயலில், திரண்ட பழங்களை அறுத்துச் செல்லும் அப்பகுதி பெண்கள்
Updated on
1 min read

தருமபுரி: அறுப்புக் கூலியை ஈடு செய்யக் கூட விலை கிடைக்காத நிலை ஏற்பட்டதால் தருமபுரி மாவட்டத்தில் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பிஞ்சும், பழமுமாக உள்ள செடிகளையும் சேர்த்து உழவடிக்கத் தொடங்கியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம் வட்டங்களில் அதிக பரப்பளவிலும், இதர வட்டங்களில் பரவலாகவும் ஆண்டுமுழுக்க தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்திப் பொருட்கள் பலவும் ஆண்டுக்கு ஆண்டு சீரான விலையேற்றம் காணும். ஆனால், வேளாண் உற்பத்திப் பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்றவை நிலையற்ற விலைத் தன்மையை கொண்டுள்ளன. அவற்றில் தக்காளியும் அடங்கும்.

தமிழகத்தில் அன்றாட உணவுத்தயாரிப்புக்கான பொருட்களில் தக்காளி முக்கிய இடம் வகித்தபோதும் அதற்கான விலை மற்றும் நிரந்தரமற்ற நிலையிலேயே இருக்கும். அந்த வகையில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை வேகமாக சரியத் தொடங்கியது. படிப்படியாக விலை இறக்கம் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக உழவர் சந்தைகளில் கிலோ ரூ.5 என்ற விலையில் தக்காளி விற்பனையாகிறது. வயல்களில் மொத்தமாக தக்காளியை வாங்க வரும் வியாபரிகள் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை மட்டுமே கொடுக்கின்றனர்.

இதனால் தக்காளி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். சில விவசாயிகள் காய்களும், பழங்களுமாக உள்ள தக்காளி வயல்களை அப்படியே டிராக்டர் மூலம் உழவடிக்கத் தொடங்கியுள்ளனர். இதுபற்றி, தருமபுரி அடுத்த ராணி மூக்கனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறியது:

விவசாய பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால், தக்காளியை கிலோ ரூ.2-க்கும் குறைவான விலைக்கு விற்கும்போது ஆட்களுக்கு வழங்கும் கூலியைக் கூட அந்த காசு மூலம் ஈடு செய்ய முடியாது. முதலீடு, மருந்து செலவு, பராமரிப்புச் செலவு உள்ளிட்ட செலவினங்களை கணக்குப் பார்த்தால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

இதுதவிர, தினமும் மனதளவில் பெரும் வேதனையையும் அனுபவிக்கும் நிலை உருவாகிறது. இதில் இருந்தெல்லாம் விடுபட்டு, அடுத்த சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்யும் நோக்கத்துடன் பூவும், பிஞ்சும், பழமுமாக உள்ள செடிகளையும் சேர்த்து 1 ஏக்கரை அப்படியே டிராக்டர் மூலம் உழவடிக்கத் தொடங்கி விட்டோம். உழவின்போது வீணாகும் பழங்கள் யாருக்கேனும் பயனளிக்கட்டும் என்று, சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்களை அறுத்துச் செல்ல அனுமதித்து விட்டோம். குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உருவாக்குவது மட்டுமே, தக்காளி விவசாயிகளின் இந்த வேதனைக்கு தீர்வாக அமைய முடியும். இவ்வாறு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in