

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேவராஜ்(45)- தேன்மொழி தம்பதி.இவர்கள் ரூ.90 ஆயிரம் மதிப்பிலான மின்சார ஸ்கூட்டரை வாங்கி கடந்த 7 மாதங்களாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஸ்கூட்டரை சார்ஜ் செய்துவிட்டு, அதை வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்தனர். நேற்று அதிகாலை மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த, தீ அருகில் இருந்த பெட்ரோல் வாகனம் மற்றும் வீட்டின் முன்புறமும் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த பேரம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வாகனங்கள் தீக்கிரையானதோடு, வீட்டின் முன்புற பகுதி சேதமடைந்தது.
இதுகுறித்து, மப்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.