Last Updated : 19 Apr, 2016 02:24 PM

 

Published : 19 Apr 2016 02:24 PM
Last Updated : 19 Apr 2016 02:24 PM

வின்னிங் சென்டிமென்ட் இடம்: திருச்சி ஜி கார்னர் திடலில் அதிமுக, திமுக பிரச்சாரம்

திருச்சியில் ஒரே மைதானத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தேர்தலையொட்டி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டத்திலுள்ள 19 அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா வரும் 23-ம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்குப் போட்டியாக அடுத்த 4 நாட்களில் அதே மைதானத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தை நடத்த திருச்சி மாவட்ட திமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக வரும் 27-ம் தேதி மைதானத்தை வாடகைக்கு அளிக்குமாறு, திமுக தரப்பிலிருந்து ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என்.நேரு, ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஜி கார்னர் மைதானத்தில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 15 தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பேச உள்ளார்” என்றார்.

ஒரே இடத்தில் இரு கட்சிகளும் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளதால், அதிக கூட்டத்தை திரட்டி தங்களின் பலத்தைக் காட்டும் முனைப்பில் இரு கட்சியினரும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக, தேர்தல் காலங்களில் ஜி கார்னர் மைதானம் திருப்புமுனையை ஏற்படுத்தும் இடம் எனவும், வின்னிங் சென்டிமென்ட் உள்ள இடம் எனவும் அரசியல் கட்சிகளால் வர்ணிக்கப்படுகிறது. கடந்த 2011 சட்டப்பேரவை, 2014 மக்களவைத் தேர்தல்களின்போது இங்கு பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. எனவே, இந்த முறையும் அதிமுக அதே இடத்தை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் கருணாநிதியின் பிரச்சாரக் கூட்டமும் இங்கு நடைபெற உள்ளது.

ஒரே நாளில் ஜெயலலிதா, வைகோ

திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஏப்ரல் 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய உள்ளார். அதேநாள் இரவு 7 மணிக்கு திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பேசவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x