Published : 21 Apr 2016 08:22 AM
Last Updated : 21 Apr 2016 08:22 AM

தாயை கொன்று நகைகளை கொள்ளையடித்து விட்டு மகளை கொலை செய்வதற்காக வீட்டில் காத்திருந்தோம்: இரட்டை கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்

தாயை முதலில் கொன்று நகைகளை கொள்ளையடித்து விட்டு, மகளை கொலை செய்ய காத்திருந்தோம் என்று இரட்டை கொலை வழக்கில் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை குன்றத்தூர் இரண்டாம் கட்டளை பெஸ்லி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (64). இவரது மகள் தேன்மொழி (32). தனியார் பள்ளி ஆசிரியை. தேன்மொழியின் கணவர் ராமசாமி (40) ஏமன் நாட்டில் பணிபுரிகிறார். இவர்களுக்கு சுரபிஸ்ரீ (7), குணஸ்ரீ (9 மாதம்) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 18-ம் தேதி வசந்தா, தேன்மொழி ஆகிய இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர். வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளைக்காரர்களால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்த சுரபிஸ்ரீ, மறுநாள் காலை யில் மயக்கம் தெளிந்து தனது தங்கை குணஸ்ரீயை தூக்கிக் கொண்டு வெளியே வந்த பின்னர்தான் இரட்டை கொலை மற்றும் கொள்ளை நடந்திருக்கும் சம்பவமே வெளியே தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய குன்றத்தூர் போலீஸார் தேன்மொழி வீட்டில் வேலை செய்த பெண் சத்யா, அவரது தோழி தவ்லத்பேகம், இவர்களின் ஆண் நண்பர் ஜெயக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப் பதாவது:

சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது, தேன்மொழி வீட்டுக் குள்ளும் தண்ணீர் புகுந்தது. வீட்டை சுத்தப்படுத்துவதற்காக தேன் மொழி ஆட்களை தேடியபோது, உறவினர்கள் மூலம் சத்யா, தவ்லத் பேகம் ஆகியோர் அறிமுகம் ஆகியிருக்கின்றனர். அதன் பின்னரும் அவ்வப்போது வந்து வேலை செய்து கொடுத்திருக் கின்றனர். அப்போது, வீட்டில் நகை, பணம் இருப்பதையும், ஆண்கள் இல்லாத வீடு என்பதையும் தெரிந்து வைத்திருந்தனர்.

நகை, பணத்தை கொள்ளை யடிப்பதற்காக வீட்டில் வசந்தா மட்டும் தனியாக இருக்கும் நேரத் தை அறிந்து, 18-ம் தேதி மதியம் 3 மணியளவில் சத்யாவும், தவ்லத்பேகமும் சென்றுள்ளனர். ஏற்கெனவே பழக்கமானவர்கள் என்பதால் இருவரையும் வீட்டுக்குள் அனுமதித்திருக்கிறார் வசந்தா. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் வந்திருப்பது குறித்து பள்ளிக்கூடம் சென்றிருந்த தேன்மொழிக்கு போன் மூலம் தகவல் சொல்லியிருக்கிறார் வசந்தா.

பின்னர் சத்யா கொடுத்த தகவலின்பேரில் வீட்டுக்குள் வந்த ஜெயக்குமார் வசந்தாவை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளையும், வீட்டிலிருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். சத்யாவும், தவ்லத்தும் வீட்டுக்கு வந்தது குறித்து தேன்மொழிக்கு தெரிந்துவிட்டதால், நாம் போலீஸில் மாட்டிக்கொள்வோம் என்பதால், அவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் மாலையில் தேன்மொழி வீட்டுக்கு வரும் வரை காத்திருந்து, அவர் வந்ததும் அவரையும் கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.

வசந்தாவை கொலை செய்த போது வீட்டில் இருந்த குழந்தை சுரபிஸ்ரீ அழுது கொண்டே வந்திருக்கிறார். உடனே அவரது கழுத்தை பிடித்து நெரிக்க, சுரபிஸ்ரீ மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர் அவரது கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளனர். ஆனால் கத்தி வெட்டு ஆழமாக படவில்லை. சுரபிஸ்ரீ இறந்துவிட்டார் என்று நினைத்து 3 பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த சுரபிஸ்ரீயால் அனைத்து உண்மைகளும் வெளியே தெரியவந்தன என்று வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x