

திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மானூர் தாலுகா வன்னிக் கோனேந்தல் பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், “ வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு நகைக்கடன் வாங்கியிருந்தோம். அரசின் அறிவிப்பால் நகைக்கடன் தள்ளுபடி ஆகும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை. நாங்கள் நகையை அடமானம் வைத்தபோது, அதற்குரிய தொகையை அப்போது கையில் வாங்கவில்லை. கூட்டுறவு கணக்கு புத்தகத்தில் மட்டுமே வரவு வைத்து கொடுத்தனர்.
3 மாதத்துக்கு பின் தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருந்தனர். ஆனால், பணத்தை தரவில்லை. நாங்கள் எங்கள் நகையை திருப்பவேண்டுமென்றால் குறைந்தபட்சம் 14 மாத வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது. கூலி தொழிலாளர்களான எங்களது நிலையை கருத்தில் கொண்டு நகைக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானூர் ஒன்றியம் எட்டான்குளம் கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், “எங்களதுபகுதியில் 4 மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. குடிநீர்குழாய் அமைந்துள்ள இடத்தில் தரைத்தளம் உடைந்து கழிவுநீர் தேங்கியிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ராதாபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர் கிறிஸ்டோபர் தலைமையில் அக் கட்சியினர் அளித்த மனுவில், “ ராதாபுரம் வடக்கன்குளம் வழியாக காவல்கிணறு செல்லும் சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மிக அதிக எடையுள்ள கனிம வளங்களை ஏற்றிச் செல்கின்றன. இதனால் சாலைகள் சேதமடைகின்றன. இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி அருகே பாலாமடை இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் ரேஷன் அட்டைகளுடன் வந்து அளித்த மனுவில், “ பாலாமடை இந்திரா நகரில் பால் பண்ணை இடிப்பு விவகாரம் தொடர்பாக சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 25 குடும்பங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்துள்ளனர். பொது குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. அங்குள்ள மளிகைக் கடையில் பொருட்களும் தருவதில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் 2 முதியவர்கள் தீக்குளிக்க முயற்சி
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
செங்கோட்டை அருகே உள்ள பூலான்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த வாவாகனி (67) என்பவர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தென்காசியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான மாந்தோப்பை ரூ.10 லட்சத்துக்கு குத்தகைக்கு வாங்கியதாகவும், அடமானம் முடிந்து 10 லட்சம் ரூபாயை திருப்பித் தரவில்லை என்பதால், பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமையா (84) என்பவர் ஆட்சியர் அலுவலகம் அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரையும் போலீஸார் மீட்டனர்.
“எனக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தபோது, அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என, பக்கத்து நிலத்தைச் சேர்ந்த பெண் பிரச்சினை செய்ததால் தற்கொலைக்கு முயன்றேன் என, அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடத் தமிழர் கட்சியினர் கண்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ‘சிவகிரி அருகே உள்ள கொத்தாடப்பட்டியில் சர்ச் அருகில் 15 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்துகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.