Published : 02 Apr 2016 08:06 AM
Last Updated : 02 Apr 2016 08:06 AM

தேர்தல் விழிப்புணர்வுப் பாடல்: தமிழக தேர்தல் அதிகாரி இன்று வெளியிடுகிறார்

தமிழக தேர்தல் துறையால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்பு உணர்வு பாடல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் 100 சதவீதம் நேர்மை; 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற கருத்தை மையமாக கொண்டு, வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் பணிகளில் தமிழக தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களை சேர்த்தல், வாக்குப்பதிவுக்கான விழிப்பு உணர்வு, கடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு குறைந்த மாவட்டங்களில் விழி்ப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நட வடிக்கைகளை தேர்தல் துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தற்போது, வாக்களி்ப்பதை வலியுறுத்தும் விதமாக புதிய பாடல் ஒன்றை தேர்தல் துறை தயாரித்துள்ளது. பால் ஜேக்கப் இசையமைப்பில், பிளேஸ் என்பவர் இப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று வெளியிடுகிறார்.

முகநூல் நிறுவனத்துடன்..

ட்விட்டர் நிறுவனத்துடன் இணைந்து ஏற்கெனவே விழிப் புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள தேர்தல்துறை, விரைவில் முகநூல் நிறுவனத் துடன் இணைகிறது. இதற்காக ஏப்ரல் 11-ம் தேதி ‘பேஸ்புக் இந்தியா’வின் பொது கொள்கை இயக்குநர் அன்கி தாஸ் சென்னையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து ஒப்பந்தம் செய்துகொள்கிறார்.

தமிழகத்தில் தேர்தல் விதிகள் தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றன. நேற்று வரை பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக 3 ஆயிரத்து 346 வழக்குகள், தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ததாக 983 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரூ.16.98 கோடி பறிமுதல்

கடந்த 30-ம் தேதி வரை, பறக்கும்படை, கண்காணிப்புக் குழுவினர் சோதனையில், ரூ.16 கோடியே 98 லட்சம் ரொக்கப்பணம், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 11 ஆயிரத்து 467 பள்ளிப் பைகள், 16 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x