

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகே உள்ள தா.வேலூர் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப் பவர் ஓட்டுநர் கார்த்திகேயன். இவரது மனைவி சித்ரா, மகள் காவியா. இவர்கள் மூன்று பேரும், தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர், தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டனர். அவர்களது செயலை பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது காவல் துறையிடம் கார்த்திகேயன் கூறும்போது, “அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 6 பைசா வட்டி என ரூ.50 ஆயிரம் கடன் பெற்றதாகவும், இதுவரை ரூ.36 ஆயிரம் வட்டி செலுத்தி உள்ளதாகவும், மேலும் 15 மாதம் வட்டி மற்றும் அசல் தொகை கொடுக்க வேண்டும். மேலும், பணத்தை கொடுக்கவில்லை என்றால் சொத்தை எழுதி கொடுக்க வேண்டும் என மிரட்டி வருவதாகவும், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என தெரிவித்தார். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றிய காவல் துறையினர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். பின்னர், அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.