வேலைநிறுத்தத்தால் பேருந்துகள் முடக்கம், மக்களுக்கு பாதிப்பு: சரத்குமார்

சரத் குமார் | கோப்புப் படம்.
சரத் குமார் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: வேலைநிறுத்தத்தால் பேருந்துகள் முடக்கம், மக்களுக்கு பாதிப்பு, பொருளாதார இழப்பு ஏற்பட்டள்ளதை அடுத்து மத்திய மாநில அரசுகள் உடனடி தீர்வு காண வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு பேருந்துகள் இயக்கப்படாமல், பொதுநிறுவனங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளது.

சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு விடுத்த போராட்ட அறிவிப்பிற்கு ஆதரவாக பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டம் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 31% பேருந்துகளே இயக்கப்படுவதால், பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சுமார் 20 கோடி பேர் பங்கேற்றுள்ள இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் உடனடியாக மத்திய – மாநில அரசுகள் தலையிட்டு, அவர்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.'' இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in