Published : 28 Mar 2022 01:03 PM
Last Updated : 28 Mar 2022 01:03 PM

இந்திய ஆன்மிக வரலாற்றில் மூத்த வழக்கறிஞர் பராசரனின் பங்கு அளப்பரியது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சனாதன தர்ம அறக்கட்டளை சார்பில் சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு சிறந்த குடிமகனுக்கான விருது வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, ஆந்திர மாநில முன்னாள் தலைமைச் செயலர் எல்.வி.சுப்பிரமணியம், சனாதன தர்ம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜ் கந்துகுரி.படம்: பு.க.பிரவீன்

சென்னை: சனாதன தர்ம அறக்கட்டளை சார்பில், சிவானந்தா சிறந்த குடிமகனுக்கான விருது-2020 வழங்கும் விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில், கே.பராசரனுக்கு விருதுவழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒரு ரிஷிபோல தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்து, நீதித் துறையில் பணியாற்றுகிறார். அவர் ஆஜராக பல்வேறு வழக்குகளில் முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமஜென்ம பூமி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகும்.

இந்திய ஆன்மிக வரலாற்றை ஆயிரம் ஆண்டுகள் கழித்துப் படித்தாலும், ராமஜென்ம பூமி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் பராசரனின் பங்கு அளப்பரியது என்று தெரியவரும். அவர் விருதுக்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும், நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய மகத்தான பணிக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மதம், மொழி, இனம் இருந்தாலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைஆன்மிகம், பண்பாடு, கலாச்சாரம்தான் மக்களை ஒருங்கிணைக்கிறது. இவை தற்போது சற்று குறைந்துள்ளன.

நாட்டில் ராணுவமும், அறிவும் இருந்தால் மட்டும் போதாது. ஆன்மிகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவையும் இருந்தால்தான், நாடு முழு வளர்ச்சி பெற்றதாகக் கருதப்படும். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.

விருது பெற்ற மூத்த வழக்கறிஞர் பராசரன் பேசும்போது, “இங்கு எனக்கு வழங்கப்பட்ட விருதை பெரிய கவுரவமாகப் பார்க்கிறேன். ராமஜென்ம பூமி வழக்கில் கிடைத்த தீர்ப்பு, குழுவாக நாங்கள் ஆற்றிய பணிக்கு கிடைத்த வெகுமதி. இதற்காக எனது ஜூனியர்கள் 9 பேருக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்றார்.

ஆடிட்டர் குருமூர்த்தி பேசும்போது, “மூத்த வழக்கறிஞராக மட்டுமல்லாமல், சிறந்த ஆன்மிகவாதியாகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் திகழ்பவர் பராசரன். ராமஜென்ம பூமி வழக்கில்அவரது வாதத் திறமையால் வழங்கப்பட்ட தீர்ப்பு, அனைவராலும் ஒருமனதாக ஏற்கப்பட்டது" என்றார்.

ஆந்திர மாநில முன்னாள் தலைமைச் செயலர் எல்.வி.சுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார். சனாதன தர்ம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜ்கந்துகுரி வரவேற்றார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ்அதிகாரி ஜெ.எஸ்.வி.பிரசாத் நன்றி கூறினார். இந்த விழாவை கிருஷ்ணா ராவ் ஒருங்கிணைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x