

கள்ளக்குறிச்சி: மகாபாரதப் போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுப் படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழாவில் 16-ம் நாள் அழுகளம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவுக்காக மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே, சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வருவர்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக இவ்விழா நடைபெறவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்பு, ஏப்.5 முதல் கூத்தாண்டவர் கோயில் திருவிழா தொடங்கி 18 நாட்கள் நடைபெற உள்ளது. ஏப்.18-ல் முக்கிய விழாவான தாலிக் கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, 19-ல் தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் குறித்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.