Published : 28 Mar 2022 06:09 AM
Last Updated : 28 Mar 2022 06:09 AM

ரூ.2 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி அட்டைப்பெட்டியில் பற்பசையை நிரப்பி நூதனமாக ரூ.25 லட்சம் மோசடி

கோவை: ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். உலர் பழங்கள் வர்த்தகம் செய்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீ ரமணா (20), உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

செந்தில்குமாருக்கு தொழில் விரிவாக்கத்துக்காக ரூ.2 கோடி பணம் தேவைப்பட்டுள்ளது. இதை அறிந்த வழக்கறிஞர் ஒருவர், செந்தில்குமாரை தொடர்புகொண்டு, கவுதம் என்பவர் ரூ.2 கோடி கடனை ஏற்பாடு செய்து தருவார் எனக் கூறியுள்ளார். இதை நம்பி கவுதமிடம் செந்தில்குமாரின் குடும்பத்தினர் அலைபேசியில் பேசியுள்ளனர்.

அப்போது, அவர் கடன் பெற்றுத் தந்தால் தனக்கு ரூ.25 லட்சம் தொகையும், மார்ட்டின் என்பவருக்கு ஒரு லட்ச ரூபாயும் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு செந்தில்குமாரின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி தனது தொழில் பங்குதாரர்களுடன் ஈரோட்டிலிருந்து கோவைக்கு காரில் ரூ.25 லட்சம் தொகையை  ரமணா எடுத்து வந்துள்ளார். கவுதமிடம் அலைபேசியில் பேசியபோது, ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள தனியார் கல்லூரி அருகே வரக் கூறியுள்ளார்.

ஸ்ரீ ரமணா உள்ளிட்டோர் அங்கு சென்றபோது, கவுதம் மற்றும் ஒருவர் சேர்ந்து ஒரு பெரிய அட்டைப்பெட்டியை காரினுள் வைத்துள்ளனர். அதோடு  ரமணாவிடமிருந்து ரூ.25 லட்சம் தொகையை பெற்றுக்கொண்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

சந்தேகமடைந்த  ரமணா உள்ளிட்டோர் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பற்பசை மற்றும் டூத் பிரஷ் மட்டுமே நிரப்பி வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில்  ரமணா புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x