Published : 28 Mar 2022 01:58 PM
Last Updated : 28 Mar 2022 01:58 PM
தாம்பரம்: தமிழகத்தில், அரசின் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு வரவேண்டிய உணவுத் தொகை கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாததால் மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விடுதி காப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1,300 விடுதிகள் உள்ளன. அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயில்கின்றனர்.
மாணவர்களுக்கு ஒரு வேளைக்கு ரூ. 11 வீதம் தினமும் ரூ.33 உணவுத் தொகை வழங்கப்படுகிறது. விலைவாசி ஏற்றம் காரணமாக, குறிப்பிட்ட உணவுகள், சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
நாள்தோறும் ஏறும் பொருட்களின் விலையால், மாணவ, மாணவியருக்கு எந்த உணவுப் பொருட்களையும் சரிவர கொடுக்க முடியாமல், விடுதி வார்டன்கள் தவித்து வருகின்றனர்.
அசைவம், முட்டை
இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக உணவு சமைக்க தேவையான பொருட்களை வாங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற புகாரை விடுதி காப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மாணவர்களுக்கு முறையாக உணவை ஏற்பாடு செய்து தர முடியாமல் அலுவலர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதிலும் குறிப்பாக அவர்களுக்கு புதன்கிழமைகளில் அசைவம் மற்றும் தினமும் முட்டை ஆகியவற்றை வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களுடைய சொந்த செலவில் உணவை ஏற்பாடு செய்துள்ளனர். அதேபோல வெளிச் சந்தைகளில் இருந்து அரிசியை கொள்முதல் செய்து உணவு அளித்து வருகின்றனர்.
மளிகை கடைகளில் அதிக அளவு கடன் வைத்ததால் பணத்தைத் திருப்பி தந்தால் மட்டுமே பொருட்கள் தர முடியும் என கடை உரிமையாளர்கள் கூறுவதால் செய்வதறியாமல் விடுதி நிர்வாகிகள் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விடுதிகளுக்கு வழங்கப்படும் தொகையை, அரசு நலத்துறைகள் அதிகரித்து வழங்குவது மட்டுமின்றி நிலுவையில் உள்ள தொகையை விரைந்து வழங்கினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். மாணவ - மாணவியர் நிம்மதியாக உணவருந்த முடியும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசிடமிருந்து இன்னும் போதிய நிதி வரவில்லை. வந்தவுடன் மாவட்ட அளவில் பிரித்து வழங்கப்படும். உணவு கட்டணத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT