Published : 28 Mar 2022 06:14 AM
Last Updated : 28 Mar 2022 06:14 AM

என்எல்சி விவகாரம் | மக்கள் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டேன்: அன்புமணி உறுதி

விருத்தாசலம்: என்எல்சி சுரங்கப்பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக, பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் ஐவர்குழு நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

நெய்வேலி என்எல்சி நிறுவ னத்தின் சுரங்க விரிவாக்கத்திற்காக, கொளப்பாக்கம், குமாரமங்கலம், கோபாலபுரம், கம்மாபுரம், சிறு வரப்பூர், விளக்கப்பாடி உள்ளிட்ட 26 கிராமங்களை கையகப்படுத்த கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு என்எல்சி நிர்வாகம் முடிவு செய்தது. அப்போது அப்பகுதி மக்கள், என்எல்சி நிர்வாகத்திற்கு இடம் தரமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டம் நடத்தினர். ஆனால், தற்போது நிலம் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விருத்தாசலம் அருகே சிறுவரப்பூர் கிராமத்தில் பாமக சார்பில் நேற்று கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டு பேசியது:

உங்களுடைய அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டேன். என்எல்சி நிர்வாகம் வருவதற்கு முன் இப்பகுதியில் இயற்கை ஊற்று இருந்தது. என்எல்சி நிறு வனம் ரூ.11,500 கோடி லாபம் பெற்ற நிறுவனம், ஆனால் இப்பகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு நிரந்தர வேலை தரவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் இன்றுவரை வேலை வழங்காமல் மேல்முறையீடு செய்துள்ளனர்.

அரசியலுக்காக நான் இங்கு வரவில்லை. விவசாயிகளுக்கான ஒரே கட்சி பாமக தான். திமுகவினர் எதிர்க்கட்சியாக இருக்கும் போது, தற்போதுள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், என்எல்சி நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் தற்போது ஆளும் கட்சியாக மாறிய பின்னர் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார். எட்டு வழிச் சாலையை அதிமுக கொண்டு வந்தபோது, எதிர்ப்புத் தெரிவித்த திமுக, இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஆதரவு நிலையை எடுத்துள்ளது.

என்எல்சி நிறுவனத்தால் இந்த மாவட்டத்திற்கு எந்த பயனும் இல்லை. அதிமுக, திமுகவினர் மட்டுமே காண்ட்ராக்ட் எடுத்து பயனடைகின்றனர். தற்போது என்எல்சி நிர்வாகம் ஒரு ஏக்கருக்கு ரூ.23 லட்சம் கொடுக்கிறோம் என்கிற போது, மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்களும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். எங்களுக்கு என்எல்சி நிர்வாகம் மீது நம்பிக்கை இல்லை.

1956-ல் நிலம் கொடுத்தவர்களுக்கு முதலில் நிரந்தர வேலை வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவது தொடர் பாக பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் ஐவர் குழு அமைத்து என்எல்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எங்கள் நிலத்தை நீங்கள் எடுக்க வேண்டாம். எடுக்க விடமாட்டோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x