சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: க்யூ பிரிவு போலீஸார் விசாரணை

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: க்யூ பிரிவு போலீஸார் விசாரணை
Updated on
1 min read

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் உள்ளது. இந்த கலங்கரை விளக்கம் குண்டு வைத்து தகர்ப்பது போன்று சமூக வலைதள பக்கங்களில் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்து இருந்தார். இது சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.

இதையறிந்த சென்னை காவல் துறையினர் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர். மேலும், கலங்கரை விளக்கம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மத்திய அரசு சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் க்யூ பிரிவு போலீஸாரும் துப்பு துலக்கி வருகின்றனர். முன்னதாக, மிரட்டல் குறித்து வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களுக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் கலங்கரை விளக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டுகளை கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை நடத்தினர். நேற்று காலை வரை நடத்திய சோதனையில் வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் கலங்கரை விளக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கலங் கரை விளக்கத்துக்கு பணிக்குச் சென்ற ஊழியர்கள் உட்பட அனைவரும் பலத்த சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுஒருபுறம் இருக்க மிரட்டல் வீடியோ வெளியிட்ட நபரை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் காரணமாக கலங்கரை விளக்கத்தில் ஏறி பொது மக்கள் பார்ப்பதற்கு நேற்று காலையில் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கலங்கரை விளக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் உட்பட அனைவரும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in