Published : 28 Mar 2022 07:15 AM
Last Updated : 28 Mar 2022 07:15 AM
சென்னை: துபாய் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நம்மை பிளவுபடுத்தும் சக்திகளை உதறித் தள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வளம், அறிவு, தொழில் நுட்பங்களை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாள்பயணமாக கடந்த 24-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார்.
துபாயில் நடந்துவரும் சர்வதேச கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை முதல்வர் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து அமீரக அமைச்சர்களையும் தொழில் துறையினரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் அதிக முதலீடு செய்ய வருமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்நிலையில், திமுக அயலக அணி சார்பில் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ, எம்.எம்.அப்துல்லா எம்.பி., துபாயைச் சேர்ந்த மீரான் உள்ளிட்டோர் சேர்ந்து ‘நம்மில் ஒருவர் - நமக்கான முதல்வர்’ என்ற தலைப்பில் துபாய் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். துபாய் சென்றதில் இருந்து தொழில்துறை சார்ந்த பன்னாட்டு நிகழ்வுகள் பலவற்றில் கோட்- சூட் அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், துபாய் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் வழக்கம்போல வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘நான் எழுதியுள்ள தன் வரலாற்று நூலுக்கு ‘உங்களில் ஒருவன்’என்று தான் தலைப்பு வைத்திருக்கிறேன். உடன்பிறப்புகளுக்கு எழுதும் கடிதத்திலும் ‘உங்களில் ஒருவன்’ என்றே குறிப்பிட்டு எழுதி வருகிறேன். ஆனால் நீங்கள் ‘நம்மில் ஒருவர்’என்கிறீர்கள். உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக்கொள்ளலாமா’’ என்று கேட்டு, தனது கைபேசி மூலமாக துபாய் தமிழர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது, அங்கு திரண்டிருந்த தமிழர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அவர்களின் ஆரவாரத்தைக் கண்டு மகிழ்ந்த முதல்வர், ‘‘எதுவும் பேசாமல் உங்களை பார்த்துக் கொண்டே இருந்துவிடலாம் என்று தோன்றுகிறது” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: கடல் கடந்து வாழ்ந்து வரும் நீங்கள் எல்லோரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக வாழ வேண்டும். சாதியோ, மதமோ உங்களை பிளவுபடுத்தக் கூடாது. இத்தகைய பிளவுபடுத்தும் சக்திகளை உங்களுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். எது நம்மை ஒற்றுமைப்படுத்துகிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். எது நம்மை பிளவுபடுத்துகிறதோ அவை அனைத்தையும் உதறித் தள்ளுங்கள். ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமூ
கம்தான், அனைத்திலும் வளர்ச்சியைப் பெறும் என்பதை மனதில்வையுங்கள்.
அதனால் தான் அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துக்குமான வளர்ச்சி என்கிற இலக்கை முன்வைத்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திமுகவின் லட்சியம். நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள். அதே நேரத்தில், நாம் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாமல் வாழுங்கள்.
இந்த நாட்டின் வளத்தையும், அறிவையும், தொழில் நுட்பத்தையும் தமிழகத்துக்கு அறிமுகம் செய்யுங்கள். எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும், அது தன் வேரை விட்டு விடுவதில்லை. அதைப்போல தமிழை, தமிழகத்தை விட்டுவிடாமல் தமிழராய் வாழ்வோம். தமிழை வளர்ப்போம். தமிழரை வளர்ப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார். இந்நிகழ்ச்சியில் இலங்கை முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான ரஃபூக், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், ஐக்கிய அரபு அமீரக திமுக நிர்வாகிகள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர்.
அறிவியல் வழியில் புதுமை ஐக்கிய அரபு அமீரக பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: துபாய் மற்றும் அபுதாபி பயணம் பல்வேறு அனுபவங்களை தந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கான நம்பிக்கையை அளித்து வரும் இப்பயணம், அறிவியல் பார்வையிலும் புதுமையை அள்ளித் தந்துள்ளது. பழங்காலத்தை நினைவூட்டுவது மட்டுமே அருங்காட்சியகங்களின் பணி அல்ல. புதுமையையும் எதிர்காலத்தையும் நோக்கி நம்மை விரைவுபடுத்துவதும்கூட அதன் பணி என அங்குள்ள மியூசியம் ஆஃப் பியூச்சர் (Museum Of The Future) காட்டியது.
போலியான பழம்பெருமைகளை பேசி மூடத்தனங்களுக்குள் புகுந்து கொள்ளாமல் அறிவியல் வழியில் புதுமையை நாடும் இதுபோன்ற அருங்காட்சியகங்கள் காலத்தின் தேவையாகிறது. இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.திமுக அயலக அணி சார்பில் துபாயில் நடந்த ‘நம்மில் ஒருவர் - நமக்கான முதல்வர்’ என்ற தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில், இலங்கை முன்னாள் அமைச்சர் ரஃபூக், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT