

மகாத்மா காந்தியின் 150-வதுபிறந்தநாளை முன்னிட்டு, இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாற்றுவதற்காக ‘தூய்மை இந்தியா’ திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்) - 2.0 திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 2024-ம்ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன்படி, தற்போது நாடுமுழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் 13,960 கிராமங்களை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக மாற்றி, தெலங்கானா முதலிடத்தில் உள்ளது.
11,477 கிராமங்களை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றி, தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது.
இந்த கிராமங்களில் சாண எரிவாயு உள்ளிட்ட கழிவு மேலாண்மை திட்டங்கள், சமையலறை மற்றும் சலவை நிலைய கழிவுநீர் மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, மனிதக் கழிவு மேலாண்மை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்துக்காக ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 881 கோடி ஒதுக்கப்பட்டு, கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுற்றுப்புறசுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய குடிநீர், சுற்றுப்புற சுகாதாரத் துறை செயலர் வினி மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.