Published : 27 Mar 2022 05:33 AM
Last Updated : 27 Mar 2022 05:33 AM

ரூ.100 கோடி இழப்பீடு தராவிட்டால் வழக்கு | 'அச்சுறுத்தலை நீதிமன்றத்தில் சந்திப்பேன்' - திமுக நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில்

சென்னை

முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்ததாக, ரூ.100கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு மற்றும் அரசு அதிகாரிகளுடன் உலக தொழில் கண்காட்சியில் பங்கேற்க அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். முதல்வரின் இப்பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு திமுக சார்பில் கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர்ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்எம்.பி., வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என பெயர் எடுத்துள்ளார். தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மக்களுக்கு பலநலத்திட்டப் பணிகளை செய்து வருகிறார். தற்போது துபாயில் நடக்கும் உலக தொழில் கண்காட்சியில் பங்கேற்க அரசுமுறை பயணமாக அமைச்சர் மற்றும் அரசுஅதிகாரிகளுடன் அவர் சென்றுள்ளார். துபாய் சென்று தொழில்முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்து, அதன்மூலம் பொருளாதாரம், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கிலேயே ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்.

ஆனால், அவரது துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும், ஐபிஎஸ் அதிகாரியாக பதவி வகித்த அண்ணாமலை பேசியிருப்பது கண்டனத்துக்குரியது மட்டுமின்றி, அடிப்படை ஆதாரமற்றது. பாஜக சார்பில் கடந்த 24-ம் தேதி விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும், 25-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் அண்ணாமலை விமர்சித்துப் பேசியுள்ளார். இவ்வாறு முதல்வருக்கும், திமுகவுக்கும் களங்கம்கற்பிக்கும் வகையில் அண்ணாமலை தொடர்ந்து உள்நோக்கத்துடன் அவதூறாக பேசி வருகிறார். எனவே, அவர் 24 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அவர்இனிமேல் இதுபோல பேசக்கூடாது.

இந்த அவதூறு பேச்சுக்கு இழப்பீடாக ரூ.100 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு 2 நாட்களில் வழங்க வேண்டும். தவறினால், சட்டப்பூர்வமாக சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘திமுகவின் அச்சுறுத்தலை

நீதிமன்றத்தில் சந்திப்பேன்’

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு திமுக கட்சி எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். திமுகவின் முதன்மை குடும்பம் சாதாரண, சாமானியனான என்னையும் அவர்களைப் போன்று துபாய் குடும்பத்துக்கு சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டில் நீதித் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான என் போராட்டம் தொடரும்.. துணிவுடன் மக்கள் துணையுடன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x