

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வழியே சென்ற யானைகள் சறுக்கி கீழேவிழுவது போன்ற வீடியோ வெளியானது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றநீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர். அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு சார்பில்தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இயற்கைக்கு மாறாக யானைகள் ரயில்களில் மோதி இறப்பதை தடுக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரச்சினை முடிவுக்கு வரும்
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல்தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர், வனத்துறை, தெற்கு ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். இக்குழு கடந்தமார்ச் 22-ம் தேதியன்று இப்பகுதியில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டது. யானைகள் வழித்தட பிரச்சினைவிரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும், என்றார்.
வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சியைப் பார்த்த நீதிபதிகள் சுற்றுலாத் தளங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்றமலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு ஏன் உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினர்.
கடும் உத்தரவு
பின்னர் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும், என எச்சரித்தனர்.
வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வரும் ஏப்.9 மற்றும் ஏப்.10 ஆகிய நாட்களி்ல் அரசுகூடுதல் தலைமை வழக்கறிஞர்ஜெ.ரவீந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் செல்வேந்திரன், சீனிவாசன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நாங்களும் நேரில் ஆய்வு செய்யஉள்ளோம் என தெரிவித்த நீதிபதிகள், அன்றைய தினம் மதுபாட்டில்கள் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கமளிக்கவேண்டும், என அறிவுறுத்திஉள்ளனர்.