

மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு எவ்வித கவலையுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்வை தயக்கமின்றி உயர்த்தி வருவது வேதனையளிக்கிறது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவில், ''ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் முதுகெலும்பை முறிக்கும் விதத்தில் தொடர்ந்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது.
இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.19 பைசாவும், டீசல் விலை 1 ரூபாயும் உயர்த்தியிருப்பது வாகன ஓட்டிகள் முதல் வர்த்தகர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது. உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்த காலகட்டங்களில் எல்லாம் அதற்கான பயனை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் போகாமல் தடுத்து கலால் வரியை விதித்து, மத்திய அரசு தனது வருவாயை மட்டும் பெருக்கிக் கொண்டது. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு எவ்வித கவலையுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்வை தயக்கமின்றி உயர்த்தி வருவது வேதனையளிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனியார் பேருந்து கட்டணங்கள் உயருகின்றன. லாரி வாடகை, சரக்கு கட்டணம் போன்றவை எல்லாம் உயர்வதால், பொதுமக்களின் அன்றாட மற்றும் அத்தியாவசியத் தேவைகளான அனைத்து பொருள்களின் விலையும் விஷம் போல் ஏறுகின்றன.
எனவே, விலைவாசி உயர்வின் தாக்கத்தில் மக்கள் தவித்து வரும் நிலை தொடர்கிறது. முதல்வர் ஜெயலலிதாவும் பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு குறித்து ஒப்புக்காக ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறார். தன் கட்சியில் உள்ள 37 எம்.பி.க்கள் மூலம் எந்தவொரு அழுத்தத்தையும் மத்திய அரசுக்குக் கொடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்த முன் வரவில்லை என்பதிலிருந்தே அதிமுக அரசு வழக்கம் போல் மக்கள் நலன் பற்றி சிறிதும் அக்கறை காட்டுவதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ஆகவே, மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், மக்களை பாதிக்கும் இந்த திடீர் திடீர் விலை உயர்வுகள் செய்யும் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.