Published : 27 Mar 2022 04:30 AM
Last Updated : 27 Mar 2022 04:30 AM

கோயம்பேடு மேம்பாலத்தின்கீழ் ரூ.82 லட்சத்தில் பசுமை பணி: மாநகராட்சி தீவிரம்

சென்னை மாநகராட்சி சார்பில் கோயம்பேடு மேம்பாலத்தின்கீழ் ரூ.82 லட்சத்தில் பசுமை போர்வை ஏற்படுத்தும் விதமாக மரங்கள், மலர் செடிகள், புல் தரைகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகள் அனைத்தும் மாநகராட்சி சார்பில் நாள்தோறும் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 102 சாலை மையத்தடுப்புகளும், 112 போக்குவரத்து தீவுத்திட்டு பூங்காக்களும் பரமாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றைஅழகாக பராமரிக்க சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மரங்கள், செடிகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சாலை மையத் தடுப்புகளை பசுமையாக பராமரிக்க தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெறவும், நமக்கு நாமே திட்டத்தில் இந்த பணிகளை மேற்கொள்ளவும் மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பராமரிப்பில் தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வரும் தனியார் மற்றும் தொண்டுநிறுவனங்கள் சாலை மையத்தடுப்புகளில் வைக்கப்படும் பலகைகளில் 3-ல் இரண்டு பங்கு மாநகராட்சி பெயரையும், 3-ல் ஒரு பங்கு தங்கள் நிறுவனத்தின் பெயரையும் அமைத்துக்கொள்ளலாம்.

இதுவரை சாலை மையத் தடுப்புகளில் அழகுபடுத்தும் பணிகள் மற்றும் பசுமையாக்கும் பணிகள் மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 8 தனியார்நிறுவனங்கள் ரூ.49 லட்சம் நிதி வழங்கியுள்ளன. இப்பணியில் நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்தும் மாநகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோயம்பேடு நெடுஞ்சாலை மேம்பாலத்துக்குகீழ் உள்ள பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.82 லட்சத்தில் மரங்கள், செடிகள், புல் தரைகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே சென்னை மாநகரை பசுமையாக அழகுடன் பராமரிக்க ஆர்வம் உள்ள தனியார் தொண்டுநிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நமக்கு நாமே திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் தங்களுடைய பங்களிப்பை அளிக்க முன்வரவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x