பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை பாஜக ஆட்சி உறுதி செய்துள்ளது: தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பெருமிதம்

பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை பாஜக ஆட்சி உறுதி செய்துள்ளது: தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பெருமிதம்
Updated on
1 min read

பாஜகவைச் சேர்ந்த அனைத்து மாநிலங்க ளின் மகளிரணி தலைவிகளும், தேசிய மகளிரணி நிர்வாகிகளும் கலந்துகொண்ட கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடந்தது. தேசியமகளிரணி தலைவி வானதி சீனிவாசன் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில மகளிரணி தலைவிஜெயலட்சுமி, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தேசிய மகளிரணி பொறுப்பாளர் குல் சாந்தகுமார் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாநில மகளி ரணி தலைவிகளும், பொறுப்பாளர்களும், தேசிய மகளிரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பேசுகையில், “4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மூலம் நாடு முழுவதும் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதும், கட்சி வேட்பாளர்களுக்கு பெண்களின் ஆதரவு இருப்பதும் தெளிவாகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள், பாஜக மீது பெண்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. உத்தரபிரதேச பிரச்சாரத்தை மாதிரியாகக் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றுவது அவசியம். பெண்களின் அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூக அதிகாரத்தை கட்சி உறுதி செய்துள்ளது. சாதாரண நிலையில் உள்ள ஒரு பெண்ணும் கட்சி பதவிகளில் உயர முடியும்” என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க வன்முறைக்கு கடும்கண்டனம் தெரிவித்து, இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மகளிரணியினர், மேற்குவங்கத்தின் வன்முறையால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதை அம்மாநில பெண் முதல்வர் தடுக்கத் தவறி விட்டார் என்றும் தீர்மா னத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in