

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியின் துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் கீரமங்கலம் துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கீரனூர் துணைத் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுக ஒதுக்கியிருந்தது.
அதன்பிறகு, கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்தமிழ்செல்வியை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த எஸ்.வி.தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். கீரனூரில் போட்டியின்றி திமுகவைச் சேர்ந்த முகமது இம்தியாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பிறகு, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் போட்டியிட்ட திமுகவினர் பதவி விலக வேண்டும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, கீரமங்கலம் துணைத் தலைவர் எஸ்.வி.தமிழ்செல்வன் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கீரனூரில் திமுக சார்பில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட முகமது இம்தியாஸ் தனது பதவியை ராஜினாமா செய்யாததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.