

தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக 7 வார்டுகளிலும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் தலா 2 வார்டுகளிலும், அதிமுக ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
சிவகிரி பேரூராட்சி துணைத் தலைவர் பதவி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அருணாசலம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக உறுப்பினர் விக்னேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டதால் திமுக தலைமை உத்தரவைத் தொடர்ந்து விக்னேஷ் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 9-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அருணாசலம் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து 1-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் லெட்சுமிராமன் போட்டியிட்டார். இதில், லெட்சுமிராமன் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அருணாசலம் 5 வாக்குகள் மட்டுமே பெற்றார். திமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காமல் சுயேச்சை வேட்பாளருக்கு திமுக உறுப்பினர்கள் ஆதரவு அளித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அச்சன்புதூர்
அச்சன்புதூர் பேரூராட்சியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், கடந்த 4-ம் தேதி நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் அமமுக, சுயேச்சை ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் சுசீகரன் வெற்றிபெற்றார்.
இதைத் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதால் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக ஆதரவுடன் 13-வது வார்டு அமமுக வேட்பாளர் அயூப் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து திமுக சார்பில் 14-வது வார்டு உறுப்பினர் சுரேஷ்குமார் போட்டியிட்டார். இதில், அமமுக வேட்பாளர் அயூப் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.