Published : 26 Apr 2016 08:01 AM
Last Updated : 26 Apr 2016 08:01 AM

தி.நகர் தொகுதியில் ஹெச்.ராஜா, கனிமொழி வேட்புமனு தாக்கல்

தி.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, திமுக வேட்பாளர் டாக்டர் கனிமொழி ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை தி.நகர் தொகுதியில், பாஜக சார்பில் அதன் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் என்விஎன் சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி, அதிமுக சார்பில் தி.நகர் சத்தியா, பாமக சார்பில் வினோத், தேமுதிக சார்பில் மெட்ரோ குமார் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் கனிமொழி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பிற்பகல் 12.40 மணிக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி கவிதா ராமுவிடம் அவர் வேட்புமனுவை வழங் கினார். திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், பகுதி செய லாளர் ஏழுமலை உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் கனிமொழி கூறும்போது, ‘‘நான் ஓட்டுக்கு பணம் அளிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுத்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக வேட்பாளர்கள் தொகுதிக்கான அடிப்படை வசதிகளை செய்யவில்லை. நான் வெற்றி பெற்றால், தி.நகரில் வாகன நிறுத்தம், போக்குவரத்து பிரச்சினைகளை சரிசெய்வேன்’’ என்றார்.

கணவர் மற்றும் தனது பெயரில் ரூ.1 கோடியே 68 லட்சத்து 49 ஆயிரத்து 281 மதிப்பில் அசையும் சொத்து, ரூ.5 கோடியே 5 லட்சம் மதிப்பில் அசையா சொத்து, ரூ.3 கோடியே 25 லட்சம் கடன் இருப்பதாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கனிமொழி தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 1.05 மணிக்கு பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். தென் சென்னை மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர், தி.நகர் தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஹெச்.ராஜா கூறும்போது, ‘‘சென்னையின் மிகப் பழமையான பகுதிகளை உள்ளடக்கிய தி.நகர் தொகுதி தற்போது குப்பைக் கிடங்காக மாறிவிட்டது. பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை செயல்படுத்துவது இத்தொகுதியில் அவசியம். மத்திய அரசின் மேலும் பல திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்படாமல் உள்ளன. நான் வெற்றி பெற்றால் தனி அலுவலகம் அமைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன்’’ என்றார்.

மனைவி மற்றும் தனது பெயரில் ரூ.29 லட்சத்து 62 ஆயிரத்து 928 மதிப்பில் அசையும் சொத்து, ரூ.86 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்து, ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 131 கடன் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x