Published : 26 Mar 2022 05:47 AM
Last Updated : 26 Mar 2022 05:47 AM

மார்ச் 28, 29-ல் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம், படி கிடையாது: இறையன்பு அறிவிப்பு

சென்னை: மார்ச் 28, 29-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம், படிகள் கிடையாது என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு பணியாளர்கள் சங்கங்கள் மார்ச் 28, 29-ம்தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்திலும் பல்வேறு அரசியல் சார்ந்த தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்க உள்ளன. ஆளுங்கட்சியான திமுகவும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தில் பணியாளர்கள் பங்கேற்றால் அரசுப் பணிகள் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது.

இந்நிலையில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, அனைத்துத்துறைகளின் செயலர்கள், துறைகளின் தலைவர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பணியாளர் சங்கங்கள் அவர்களின் கோரிக்கைகளுக்காக மார்ச் 28, 29-ம் தேதி அறிவித்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, மாநிலத்தில் உள்ள சில அங்கீகாரம் பெறாத சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. மாநில அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, போராட்டம் நடத்துவது மாநில அரசு அலுவலகங்களின் பணிகளைப் பாதிக்கும். இது, தமிழகஅரசு பணியாளர்கள் நடத்தை விதிகளை மீறுவதாகும்.

எனவே, இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடக் கூடாது என்றும். அலுவலகத்துக்கு வராமல் இருக்கக்கூடாது என்றும். பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஒருவேளைமார்ச் 28, 29-ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் பட்சத்தில், அவர்களுக்கு அந்த நாட்களில் எவ்வித சம்பளம் மற்றும் படிகள் வழங்கக் கூடாது. அந்த நாட்கள் ‘நோ ஒர்க் - நோ பே’ என்ற அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும், அந்த நாட்களில் மருத்துவ விடுப்பு தவிர தற்செயல் விடுப்பு உள்ளிட்ட வேறு எந்த விடுப்பும் வழங்கப்படக் கூடாது.

மேலும், அந்த 2 நாட்களில் பணியாற்றியவர்கள் குறித்த வருகைப்பதிவேடு விவரங்கள், காலை 10.15 மணிக்குள் தலைமைச் செயலக சம்பந்தப்பட்ட துறைகளின் தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அதை தலைமைச் செயலக துறை அலுவலகங்கள், 10.30 மணிக்குள் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு உரிய படிவத்தில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) தலைவர் ராஜேஷ் லக்கானி, துறை சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வேலைநிறுத்தத்தில் பங்கேற்பவர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் வழங்கப்படாது’’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், அரசுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘‘மார்ச் 28, 29-ம் தேதிகளில்நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் அனைத்து பணியாளர்களும் தவறாமல் பணிக்கு வரவேண்டும். அன்று எவ்விதமான விடுப்பும் அனுமதிக்கப் படாது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. அன்று பணிக்கு வராவிட்டால் ‘ஆப்சென்ட்’ செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x