வணிக வரித் துறையில் ரூ.1 லட்சம் கோடி; பத்திரப் பதிவு மூலம் ரூ.13,406 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்

வணிக வரித் துறையில் ரூ.1 லட்சம் கோடி; பத்திரப் பதிவு மூலம் ரூ.13,406 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு வணிக வரித் துறையில் ரூ.1,00,346 கோடியும், பத்திரப் பதிவு மூலம் ரூ.13,406 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வருவாயில் வணிக வரி, பதிவுத் துறை மூலம்கிடைக்கும் வருவாய் பெரும்பான்மை பெறுகிறது.

85 சதவீத பங்களிப்பு

மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் இந்த 2 துறைகளின் பங்களிப்பு 85 சதவீதம் ஆகும்.

இந்த 2021-22 நிதி ஆண்டில் மாநில சொந்த வருவாய் மூலம்அரசுக்கு சுமார் ரூ.1.42 லட்சம் கோடிகிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இதுவரை இல்லாத அளவுக்கு வணிக வரி, பத்திரப் பதிவு மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நடப்பு 2021-22 ஆண்டின் திருத்திய வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வணிக வரி வருவாய் ரூ.96,109.66 கோடியாக மதிப்பிடப்பட்டது.

அந்த வருவாய் இலக்கை வணிக வரித் துறை கடந்த 15-ம்தேதி கடந்துள்ளது. கடந்த 24-ம்தேதி வரை வணிக வரித் துறையில் ரூ.1,00,346.01 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அதேபோல, பத்திரப் பதிவுத் துறையில் 2021-22 ஆண்டு திருத்திய வரவு செலவு திட்ட மதிப்பீடுகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட ரூ.13,252.67 கோடி இலக்கை, கடந்த மார்ச் 23-ம் தேதி கடந்துள்ளது. கடந்த 24-ம் தேதி வரை பதிவுத் துறையில் ரூ.13,406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வணிக வரி, பதிவுத் துறை ஆகிய 2 துறைகளும் கடந்து சாதனை படைத்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in