

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்ய வனத்துறை அலுவ லர் தலைமையில் குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முதல் பெருங்குடி வரையுள்ள நீர்நிலை பகுதியில் பியூலா நகர், முத்துராமன் நகர் வீட்டு உரிமையாளர் நலச்சங்கத்தினர் கட்டிட இடிபாடுகளை கொட்டி வருகின்றனர். இதனால் நீர்நிலை வாழ் உயிரினங்கள் இறப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதுகுறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இவ்வழக்கு நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய 2-வது அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
பள்ளிக்கரணை சதுப்பு நில நீர்நிலை பகுதியில் கட்டிட இடிபாடு களை கொட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது. இவ்வழக்கில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சோழிங்கநல்லுார் வட்டாட்சியர் பிரதிவாதிகளாக சேர்க்கப்படுகின்றனர்.
கட்டிட இடிபாடுகள் கொட்டப்படும் இடம் வனத்துறை பகுதியா அல்லது நீர்நிலை பகுதியா என ஆய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
இக்குழுவில் சோழிங்க நல்லுார் வட்டாட்சியர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், குடிநீர் வாரிய உதவி பொறியாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் பியூலா நகர், முத்துராமன் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகி ஒருவர் சேர்க்கப்படுகின்றனர். இக்குழு சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கு விசாரணை மே 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.