

கோவை: ‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலியாக முதல்வரின் தனி கவனத்தால் ஈரோடு அருகே உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மாணவருக்கு வேளாண் கல்லூரியில் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சுண்டப்போடு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன்(21). குழந்தைத் தொழிலாளியாக மாடு மேய்த்துக்கொண்டிருந்த சந்திரன் மீட்கப்பட்டு, குழந்தைத் தொழிலாளர்களுக்கான சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு 2 ஆண்டுகள் படித்தார்.
அருகே உள்ள குன்றி எனும்கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 10-ம் வகுப்புவரை படிப்பைத் தொடர்ந்தார். இதையடுத்து, கோபிசெட்டிப்பாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பிரிவில் சேர்ந்து படித்தார்.
சுண்டப்போடு கிராமத்தில் இருந்து இதுவரை ஒருவர்கூட கல்லூரிப் படிப்பில் சேர்ந்ததில்லை. முதலாவது நபராக, கடந்த 2019-ம் ஆண்டு பிளஸ் 2முடித்ததும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துக்கும் சந்திரன் விண்ணப்பித்திருந்தார்.
கால்நடை மருத்துவப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தகுதி மதிப்பெண் பட்டியலில் பழங்குடிப் பிரிவில் முதலாவது இடத்தில் இருந்தார் சந்திரன். இருப்பினும் அவருக்கு கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. உயர் கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தால் மட்டுமேஅந்த வாய்ப்பைப் பழங்குடியினர்பெற முடிகிறது. இல்லைஎன்றால், அவர்களின் உயர் கல்விக் கனவுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியைத்தான் வைத்துக்கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கே இது எதிரான அணுகுமுறை.
வெளியான கட்டுரை
கல்லூரியில் குறைவான இடங்களே உள்ளபோது, பழங்குடியினர் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘ஒரு சதவீத இடஒதுக்கீடு: உயர்கல்வி மறுக்கப்படும் பழங்குடி மாணவர்கள்' என்ற தலைப்பில் ‘இந்து தமிழ்' நாளிதழின் நடுப்பக்கத்தில், 2019 ஆகஸ்ட் 20-ம் தேதி விரிவான கட்டுரை வெளியானது.
இந்த கட்டுரையை படித்துவிட்டு அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திரனை நேரில் அழைத்து, சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு முழுமையான உதவிகளைச் செய்வதாக உறுதிஅளித்தார். அந்த செய்தி 2019 ஆகஸ்ட் 23-ம் தேதி படத்துடன் வெளியானது.
அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம், பாதிரிகுப்பத்தைச் சேர்ந்த வாசகர் பி.கிருஷ்ணராஜ், நமது நாளிதழில் செய்தி வெளியான பழங்குடி மாணவரின் தற்போதைய நிலை குறித்து அறிந்துகொள்ள விரும்புவதாக கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன் பிறகு, குடும்ப வறுமையால் மீண்டும் சந்திரன்மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் ‘இந்து தமிழ்'நாளிதழின் நடுப்பக்கத்தில், ‘இப்படிக்கு இவர்கள்’ பகுதியில் 2021 ஜூலை 5-ம் தேதி வெளியானது. இதையடுத்து, மீண்டும் அந்த செய்தி கவனம் பெற்றது.
முதல்வருக்கு நன்றி
நடப்பு ஆண்டு மீண்டும் கால்நடை மருத்துவப் படிப்புக்கும், வேளாண்மை பாடப் பிரிவுக்கும் சந்திரன் விண்ணப்பித்திருந்தார். அதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல்வர் அலுவலகத்தில் இருந்து சந்திரனுக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது. அப்போது, கோவையில் உள்ளதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு நேரில் வருமாறு தெரிவித்துள்ளனர்.
அங்கு சென்றபோது, சந்திரனுக்கு வேளாண்மை பாடப் பிரிவில் (சுயநிதி) இடம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்திரன் கூறும்போது, ‘இந்துதமிழ்' நாளிதழில் வெளியான தொடர் செய்திகள், முயற்சிகளுக்குப் பிறகு இடம் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்தநன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.