

தஞ்சாவூர்: ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளரை கர்நாடக மாநிலப் போலீஸார் நேற்று பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றனர்.
ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 18-ம் தேதிஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், திருநெல்வேலியைச் சேர்ந்த மாநில பேச்சாளர் ஜமால்முகமது உஸ்மானி(43) என்பவர், பிரதமர் மோடி மற்றும் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, ஜமால் முகமது உஸ்மானியை கைது செய்து, தஞ்சாவூர் கிளை சிறையில் அடைத்தனர்.
வழக்குப் பதிவு
இந்நிலையில், கர்நாடகநீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்துப் பேசியதாக பெங்களூருவிலும் ஜமால் முகமது உஸ்மானி மீது கர்நாடக மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அவரை நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, தஞ்சாவூர் கிளை சிறைக்கு நேற்று வந்த கர்நாடக மாநில போலீஸார், நீதிமன்ற சம்மனை காண்பித்து, ஜமால் முகமது உஸ்மானியை பெங்களூருவுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.