

கோவை: கோவையில் 24 மணி நேர கட்டணமில்லா சேவை மையத்துக்கு 5 நாட்களில் மக்களிடமிருந்து 1,749 அழைப்புகள் வந்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள அந்த மையத்தை நேற்று ஆய்வு செய்தபின் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்ட மக்களின் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் போன்ற பொதுப்பிரச்சினைகள் சார்ந்த அனைத்து கோரிக்கைகள், புகார்களை 94898 72345 என்ற எண்ணில் அழைத்து இந்த மையத்தில் தெரிவிக்கலாம். கடந்த 20-ம் தேதி திறக்கப்பட்ட இந்த மையத்துக்கு இதுவரை 1,749 அழைப்புகள் வந்துள்ளன.
இந்த மையத்துக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. வந்த அழைப்புகளில் அதிகமாக சாலை, சாக்கடை வசதிகள், குடிநீர் தேவை, குப்பை அகற்றுவது, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. இங்கு வரும் புகார்களின் அடிப்படையில் நகராட்சி, மாநகராட்சியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இதுபோன்ற மையங்கள் அடுத்தகட்டமாக திறக்க ஆலோசிக்கப்படும்.
கோவை மாநகராட்சியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் மாநகராட்சியின் பெரும்பாலான சாலைகள் மோசமாக இருந்தன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்றபோது மக்கள் அதுகுறித்து எடுத்துரைத்தார்கள்.
அதற்காகத்தான் முதல்வர் சிறப்பு நிதியாக ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளார். ஒவ்வொரு கட்டமாக டெண்டர் விடும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே சில பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பட்ஜெட் வடிவமைக்கும் பணியில் மேயர், துணைமேயர், ஆணையர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.