Published : 26 Mar 2022 08:36 AM
Last Updated : 26 Mar 2022 08:36 AM

அனுமதியின்றி கட்டும் கட்டிடங்களுக்கு ‘சீல்’ - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இன்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் சதுரஅடி வரையிலான கட்டிட அனுமதியானது, தொடர்புடைய மண்டல அலுவலகங்களின் செயற்பொறியாளர்கள் மூலமாகவும், 5001 சதுரஅடி முதல் 10 ஆயிரம் சதுரஅடி வரை, ரிப்பன் கட்டிட தலைமையிடத்தில் உள்ள நகரமைப்பு பிரிவு மூலமாகவும் அளிக்கப்படுகிறது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் கட்டிட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில்தான் கட்டிடங்களைக் கட்ட வேண்டும்.

அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டால், கட்டிட உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்படும். மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் தொடர்புடைய கட்டிடத்தை மூடி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும்.

சென்னையில் தற்போது விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்த விவரங்கள், தொடர்புடைய உதவி பொறியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, ராயபுரம் மண்டலத்தில் கடந்த 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் 125 பேருக்கு இடத்தைக் காலிசெய்ய குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 99 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 11 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x